

கிராமப்புறங்களில் இருந்து 404 இளம் விஞ்ஞானிகள், அறிவியல் ஆய்வுகள் மூலம் உலக சாதனை, வீதிதோறும் விஞ்ஞானக்கூடம் மூலம் மாணவர்களுக்கு வாட்ஸ் அப் பயிற்சி என கரூர் அரசுப்பள்ளி ஆசிரியர் தனபாலின் சாதனைகள் நீள்கின்றன.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஆசிரியர் தனபால்.
பள்ளியில் இளம் விஞ்ஞானிகள் குழுவைத் தொடங்கி அறிவியல் துறையில் ஆர்வமுள்ள 6 முதல் 9 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இளம் விஞ்ஞானி அறிவியல் ஆய்வகத்தில் சிறப்பாகப் பயிற்சி அளிக்கிறார். கிராமப்புற மாணவர்களுக்கு அடிப்படை அறிவியலை எளிய முறையில் செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கற்றல் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் கற்றல் மூலம் மாணவர்களை அறிவியல் துறையில் ஆர்வத்துடன் செயல்பட வைக்கிறார்.
அறிவியல் துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடம் உள்ள தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில திறன் வெளிப்பாடு, அறிவியல் கண்காட்சி, கருத்தரங்கம், வினாடி வினா, அறிவியல் நாடகம், ஆய்வுக்கட்டுரை, ஐ.சி.டி தொழில்நுட்பத்தில் குறும்படம் தயாரித்தல், அறிவியல் களப்பயணம் மேற்கொள்தல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொள்கிறார்.
அறிவியல் மாதாந்திர புத்தகங்களான அறிவியல் ஒளி, துளிர், விஞ்ஞானச் சிறகுகள், ஜந்தர் மந்தர் மற்றும் தினசரி தமிழ், ஆங்கில நாளிதழ்களை சொந்த செலவில் பள்ளிக்கு வரவழைக்கிறார். தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வேலை நேரம் தவிர்த்து நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் என ஆண்டுக்கு 400 மணி நேரம் கூடுதல் பயிற்சி அளித்துள்ளார். இதன் மூலம் 14 ஆண்டுகளில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களை அறிவியல் கண்டுபிடிப்பில் பங்குபெற வைத்து, இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 20 அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி, அதைக் காட்சிப்படுத்தும் விதமாக மாவட்டம், மாநிலம், தென்னிந்தியா, தேசியம், சர்வதேச அளவில் மாணவர்களுடன் பயணித்து அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி 404 கிராமப்புற மாணவர்களை இளம் விஞ்ஞானி சான்று பெற வைத்துள்ளார்.
உலக சாதனை ஆசிரியர்
மாணவர்களிடம் அறிவியல் பரிசோதனைகளைப் பரவலாக எடுத்துச் செல்லும் நோக்கில் 80 நிமிடங்களில் 100 இயற்பியல் பரிசோதனைகளைச் செய்து 'கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் 'புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் உலக சாதனை ஆசிரியர் பெ.தனபால்.
வீதிதோறும் விஞ்ஞானக்கூடம் - 2020
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் கனவான 2020-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்தை மாணவர்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் வீதிதோறும் விஞ்ஞானக்கூடம் என்ற வாட்ஸ்அப் குழுவை ஆசிரியர் தனபால் உருவாக்கி உள்ளார். தமிழகத்தில் உள்ள 5 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களிடம் உள்ள தனித்திறன்களை மேம்படுத்தும் விதத்தில் புதிய படைப்பாற்றல், புதுமைகள் படைத்தல், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய அறிவு சார் திறன் மேம்பாட்டு பயிற்சிகள, இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார் ஆசிரியர் தனபால்.