

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக சூறைகாற்று பலமாக வீசி வருகிறது. இது கடற்கரை பகுதிகளில் அதிவேகமாக வீசுவதுடன் கடல் சீற்றமாகவும் உருவெடுத்துள்ளது.
இதனால் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி பணியில் ஈடுபடுமாறும், நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் மீன்வளத்துறையினர் வலியுறுத்தியிருந்தனர். மேலும் மெரைன் போலீஸார் கடற்கரை பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தூண்டில் வளைவு கடல் சீற்றத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பெயர்ந்து கடலில் விழுந்துள்ளது. இதனால் கடல் நீர் மீனவ கிராமத்திற்குள் புகும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று பலமான சூறைகாற்று வீசியதுடன் கடும் கடல் சீற்றம் நிலவியது. இதனால் 50 சதவீத விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு சென்றிருந்தன.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், மற்றும் பைபர் படகுகள், கட்டுமரம், வள்ளங்கள் கடலுக்கு செல்லவில்லை. குளச்சல் மீன்பிடி துறைமுகம், கடியப்பட்டணம் கடல் பகுதிகளில் நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.