

பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இன்று முதல் தமிழகத்தில் மெட்ரோ ரயில், சிறப்புப் பயணிகள் ரயில் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயக்கம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில், தொலைதுாரப் பேருந்துகள் இன்று (செப்.7) முதல் இயக்கப்படுகின்றன. திருச்சி, திருப்பூர், கோவை, சென்னை, மதுரை, சேலம், வேலுார் உள்ளிட்ட நகரங்களுக்குப் பயணிகளின் தேவைக்கேற்பப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவு நேரத் தொலைதூரப் பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், நாகப்பட்டினம், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் ஆகிய 6 மண்டலங்களில் மொத்தம் 3,335 அரசுப் பேருந்துகள் உள்ளன. இதில் 60 சதவீதப் பேருந்துகள் அதாவது 2,167 பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் அனைத்திலும், அரசு வழிகாட்டுதலின்படி தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு நடத்துநர் மூலம் சானிடைசர் வழங்கப்படுகிறது. பேருந்து நிலையங்களுக்குப் பேருந்து வரும்போது கிருமிநாசினிகள் மூலம் அவை சுத்தம் செய்யப்படுகின்றன.
மக்களின் தேவைக்கு ஏற்பப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் அரசு வழிகாட்டு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து, பாதுகாப்பாகப் பயணித்து அரசுப் பேருந்து சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.