காங்கிரஸ் நிர்வாகி மீது தாக்கு: மதுரவாயல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை வேண்டும்: கே.எஸ்.அழகிரி கோரிக்கை
மக்கள் பிரச்சினைக்காக போராடிய காங்கிரஸ் நிர்வாகியை மதுரவாயல் உதவி ஆணையர் தாக்கியதாக எழுந்த புகாரின்பேரில் மதுரவாயல் உதவி ஆணையர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
“சென்னை அரும்பாக்கம், திருவீதியம்மன் கோவில் பகுதியில் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் மழைநீர் வடிகால் கால்வாய் திட்டத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அதனை அகற்றுகிற முயற்சியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கடைகளை அகற்றுகிற முயற்சியில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரபாண்டியன், கரோனா நோய் பரவலின் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில் வீடுகள், கடைகளை இயந்திரங்கள் மூலம் அகற்றுவது என்ன நியாயம் ? இதற்கு கால அவகாசம் வழங்கி அதற்குப் பிறகு உங்கள் நடவடிக்கைகளை தொடரலாம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தனது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரபாண்டியன் மீது மதுரவாயல் உதவி ஆணையர் ஜெயராமன் தேவையில்லாமல் சட்டையை பிடித்து இழுத்து தாக்கி, கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது தரக்குறைவான வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.
நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை பலவந்தமாக அப்புறப்படுத்துவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதற்காக மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரபாண்டியனை தாக்கிய மதுரவாயல் உதவி ஆணையர் ஜெயராமன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரது வரம்புமீறிய செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்திருக்கிறார்கள். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி வரம்புமீறி அதிகார துஷ்பிரயோகம் செய்த மதுரவாயல் உதவி ஆணையர் ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை மாநகர காவல்துறை ஆணையரை கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
