

தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்ட கரோனா நோயாளியின் உயிரை மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்ட கரோனா மற்றும் மூளையில் ஏற்பட்ட நீர்க்கோர்ப்புப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவு இல்லாமல் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் 46 வயது மதிக்கத்தக்க பெண். இவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூளை ரத்தக்குழாய் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டு இரண்டு மாதத்திற்கு முன் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அதன்பின்பும் சரியாகாததால் அவரது மூளையில் அதிக நீர்க்கோர்ப்பு ஏற்பட்டு மேலும் இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இவர், உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சுயநினைவு இல்லாமல் செயற்கை சுவாசம் பெற்றுவந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், இவருக்கு மூளையில் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தனர்.
மூளையில் நீர்கோர்ப்பு அதிகளவு ஏற்பபட்டு மூளைப்பகுதியில் நீர் அழுத்தம் அதிகமாக உள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அறுவை சிகிச்சை துறைத் தலைவர் வீர பாண்டியன் மேற்பார்வையில் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மணிமாறன், பிரசாத் ஆகியோர் நோயாளியின் மூளையில் ஏற்பட்ட நீர் கோர்ப்பினை அறுவை சிகிச்சை மூலம் நீர் கோர்ப்பினை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தற்போது நோயாளிக்கு செயற்கை பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு கரோனா தொற்று மற்றும் மூளைப்பிரச்சனைக்கான சிகிச்சைகள் ஒரே நேரத்தில் வழங்கப்படுகிறது. டீன் சங்குமணி விரைந்து செயல்பட்ட மருத்துவக்குழுவினரை பாராட்டினார்.