டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு: கோகுல்ராஜ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு: கோகுல்ராஜ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Updated on
1 min read

திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி கே.அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். விஷ்ணு பிரியா நேரடியாக விசாரித்துவந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் டிஎஸ்பியாக இருந்தவர் விஷ்ணுபிரியா (27). இவர் நேற்று முன்தினம் திடீரென காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணியில் சேர்ந்த 7 மாதத்துக்குள் இளம் போலீஸ் அதிகாரி திடீரென தற்கொலை முடிவை எடுத்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

உயர் அதிகாரிகளின் நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப் பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அவர் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து, இந்த கொலை வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதில் ஒரு பிரிவு திருச்செங் கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தலைமையில் அமைக்கப்பட்டது. கோகுல்ராஜ் கொலை குறித்து நேரடி விசாரணையில் விஷ்ணு பிரியா ஈடுபட்டிருந்தார். இந்நிலை யில் அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது பல சந்தேகங் களை எழுப்பியுள்ளது. கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணை சம்பந்தமாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாலேயே விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது.

விஷ்ணுபிரியா கடிதம்

தற்கொலை செய்துகொள் வதற்கு முன்பு விஷ்ணுபிரியா எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். ‘கோகுல்ராஜ் கொலை வழக்குக்கும், தனது தற்கொலைக்கும் தொடர்பு இல்லை’ என்று அவர் எழுதியிருப் பதாக போலீஸார் கூறுகின்றனர். தற்கொலை செய்துகொண்டவர் இந்த ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டு சொல்லியிருப்பதாக கூறப்படுவதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தந்தை கோரிக்கை

இதற்கிடையில், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தினர். இது தொடர்பாக உள் துறை செயலருக்கும் மனு அளித்தனர். சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க டிஜிபி கே.அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கையும் சிபிசிஐடிக்கு மாற்றி அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் சம்பவ இடத்துக்கு நேற்று இரவே சென்று விசாரணையை தொடங்கி யுள்ளனர். மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்த விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in