

ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னைக்கு அதிக அளவில் மக்கள் திரும்புகின்றனர், கரோனா பாதிப்பால் அடிக்கடி கைகளை கழுவ அரசு சொல்கிறது, அதற்கேற்ப குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் அதுகுறித்து குடிநீர் வாரியம் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள், தங்கள் கைகளை கழுவுவதற்கும் , அத்தியாவசிய தேவைக்குமான தண்ணீரை விநியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், “சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை செய்து வருகிறது.
கரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள், தங்கள் கைகளை கழுவுவதற்கும் , அத்தியாவசிய தேவைக்குமான தண்ணீரை விநியோகிக்க கரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்ய குடிநீர் வாரியம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை பெரு நகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தரப்பில் ஏற்கெனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னைக்கு ஒரு நாளைக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கிலும் மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தரப்பில், “கரோனா ஊரடங்கில் தளர்வு காரணமாக சொந்த ஊரில் இருந்து அதிகளவில் மக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால் சென்னைக்கு 1,200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்” என தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், சென்னை மக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்கவும், கூடுதலாக விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்கவும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.