Published : 07 Sep 2020 01:42 PM
Last Updated : 07 Sep 2020 01:42 PM

திமுக பொதுக்குழு ஜனநாயகக் களத்திற்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளும் பாசறை; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

திமுக பொதுக்குழு, ஜனநாயகக் களத்திற்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளும் பாசறையாக அமையவிருக்கிறது என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 7) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

"இது 'முப்பெரும் விழா' மாதம்! பெரியார்- அண்ணா; இருவரும் பிறந்த மாதம். அண்ணாவால் உருவாக்கப்பட்டு, தலைவர் கருணாநிதியால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட திமுக தோற்றுவிக்கப்பட்ட மாதம். இந்த மூன்று விழாக்களையும் ஒன்றிணைத்து 'முப்பெரும் விழா'வாகக் கொண்டாடும் பாங்கை நமக்கு வழங்கியவர், தலைவர் கருணாநிதி.

திமுகவின் விழாக்களும் மாநாடுகளும், கூடிக் கலைவதற்கானவைகளல்ல. அவை, 'கூடிக் கலையும் காகங்கள் அல்ல; கூடிப் பொழியும் மேகங்கள்'.

அங்கே கொள்கை முழக்கங்கள் எதிரொலிக்கும். அவை, தமிழ்நாட்டு மக்களின் தன்மானத்தையும், தனிப்பெரும் முன்னேற்றத்தையும், நலனையும், காக்கும் அறப்போர்க் களத்திற்கு ஆயத்தம் செய்பவை.

விழாக்களையும், மாநாடுகளையும் உடனடியாக நடத்திட முடியாது என்பதால், முறைப்படி கூடுகின்ற செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களில் அதற்கான தீர்மானங்கள் ஒப்புதல் பெறப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, அதனை விழாக்களிலும் மாநாடுகளிலும் முன்னெடுத்து, திமுகவின் கடைசித் தொண்டருடைய கடமை உணர்ச்சி மிளிரும் பங்கேற்புடன், சீரும் சிறப்புமாகச் செயல்படுகின்ற திராவிட ஜனநாயக இயக்கம்தான் திமுக. அந்த உணர்வுடன்தான் செப்டம்பர் 9 அன்று திமுக பொதுக்குழு கூடுகிறது.

சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில், தேனடை போல் கூடும் உங்கள் திருமுகங்களைக் காண்பது வழக்கம். ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது ஏற்படும், இயக்கம் எனும் குடும்பப் பாச உணர்வுக்கு இணையே இருக்காது. அத்தகைய உணர்வுகள் பரவிடும் வாய்ப்பை, இந்தக் கரோனா காலம் நமக்கு வழங்கிடவில்லை. அதனால், திமுகவின் நீண்ட வரலாற்றில் முதன்முறையாகக் காணொலி மூலம் திமுகவின் பொதுக்குழு நடைபெறவிருக்கிறது.

ஊரடங்கு நடைமுறைக்கு வந்த மார்ச் மாதத்திலிருந்தே திமுக உடன்பிறப்புகளை, காணொலி வாயிலாகத் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்புகளைப் பெற்று மகிழ்ச்சி கொண்டு வருகிறேன்.

பேரிடர் காலத்தில் மக்களை எவ்வாறேனும் முயன்று காத்திட வேண்டும் என்ற மகத்தான செயல்திட்டத்துடன் 'ஒன்றிணைவோம் வா' எனும் பெயரில், தமிழகம் முழுவதும் திமுகவினர் மேற்கொண்ட நலப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையிலும் அவற்றால் பலன் பெற்றவர்கள் குறித்த விவரங்களைக் கேட்டறியும் வகையிலும், காணொலி நிகழ்வுகள் அமைந்தன.

அதனைத் தொடர்ந்து, திமுகவின் மூத்த நிர்வாகிகளுடனான உரையாடல்கள், மாவட்ட திமுக நிர்வாகிகளுடனான சந்திப்புகள், திமுகவில் உள்ள அணிகளின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், திமுகவின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் சந்திப்பு எனக் காணொலி நிகழ்வுகள் இல்லாத நாளே இல்லை என்று எடுத்துச் சொல்லும் வண்ணம், திமுக பணிகள்; நடுநிலையாளர்கள் போற்றத்தக்க வகையில், செம்மையாக நடைபெற்று வருகின்றன.

திமுகவினருடன் மட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழர்களின் நிலவரம் அறியவும், முன்களப் பணியாளர்களாகச் செயல்படும் மருத்துவத்துறையினரின் தேவைகளை அறியவும், விவசாயிகள், வணிகர்கள், பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் பண்பட்ட கருத்துகளைக் கேட்டிடவும், காணொலி நிகழ்வுகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.

அண்மையில்கூட, சூழலியலைத் தகர்க்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, திமுக முன்னெடுத்த காணொலிக் கருத்தரங்கில் பங்கேற்று, இயற்கை ஆர்வலர்கள், வல்லுநர்களுடன் உரையாடினேன்; இந்தக் கருத்தரங்கம் அகில இந்தியக் கவனத்தை ஈர்த்தது.

கரோனா பேரிடர் காலத்திலும் மக்கள் நலன் குறித்துச் சிந்திக்காத மத்திய, மாநில அரசுகளின் வஞ்சகப் போக்கின் அடையாளமாக விளங்கும் நீட் தேர்வுகள், ஆன்லைன் வகுப்புகள், புதிய கல்விக் கொள்கைத் திணிப்பு, இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு, வரிசையாக மாநில உரிமைகள் பறிப்பு, சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளை, கரோனாவின் பெயரால் நடைபெறும் கொடுமையான ஊழல் சுரண்டல்கள், சிதைந்து சீரழிந்து வரும் சட்டம் - ஒழுங்கு, பெண்கள் - முதியோர் - குழந்தைகள் ஆகியோருக்குப் பாதுகாப்பற்ற நிலைமை, ஒவ்வொரு நாளும் குற்றங்கள் அதிகரிப்பு என, அனைத்து அவலங்களையும் காணொலி வாயிலாக திமுக தான் மக்கள் மன்றத்தின்முன் வெளிப்படுத்துகிறது.

நாள்தோறும் நாட்டு நலன் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றும் திமுகவின் பணிகளை, மேலும் பரவலாக்கிடவும், அதற்கேற்ற கட்டமைப்பை வலுப்படுத்திடவும், கலந்தாலோசனைகளை மேற்கொண்டிட, திமுக பொதுக்குழு காணொலியில் கூடுகிறது.

தலைவர் கருணாநிதியின் கொள்கைச் சகோதரனாகத் தோளோடு தோள் நின்று, திமுகவின் பொதுச்செயலாளராக நெடுங்காலம் பணியாற்றி இயக்கம் வளர்த்த, க.அன்பழகனின் மறைவுக்குப் பிறகு, பொதுச்செயலாளர் பொறுப்புக்கு திமுகவின் மூத்த முன்னோடி, அண்ணாவின் பாசத்திற்குப் பாத்திரமான தலைவர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நெருக்கமான, துரைமுருகன் விண்ணப்பித்திருக்கிறார். அதுபோலவே, கருணாநிதியும், எம்.ஜி.ஆரும், நானும், சாதிக், ஆற்காடு வீராசாமி ஆகியோரும் வகித்திட்ட பொருளாளர் பொறுப்புக்கு, திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர், கருணாநிதியின் பட்டாளத்துச் சிப்பாயாகச் சிறப்புறச் செயலாற்றும் ஆற்றல் வீரர் டி.ஆர்.பாலு விண்ணப்பித்திருக்கிறார். திமுக பொதுக்குழுவில் இதற்கான ஒப்புதலை முறைப்படி பெற்ற பிறகு, அவர்கள் இருவரும் இந்தப் பொறுப்புகளை ஏற்கும் இனிய தருணம் நிகழவிருக்கிறது.

திமுக பொதுக்குழு என்பது, உள்கட்சி ஜனநாயகத்திற்கான உயர்ந்த உரைகல். திமுக வளர்ச்சிக்கு, ஆக்கப்பூர்வமான ஆணித்தரமான கருத்துகளைப் பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்துரைக்கும் வாய்ப்பினை அண்ணா - தலைவர் கருணாநிதி ஆகியோர் வழங்கினர்.

அவர்தம் அடிச்சுவட்டில், காணொலி பொதுக்குழுவிலும், திமுகவின் உண்மையான உறுதியான வளர்ச்சிக்கேற்ற, பொலிவும் பொருத்தமும் வாய்ந்த கருத்துகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். அனைத்து உறுப்பினர்களின் மனக்குரலாக, ஒவ்வொரு திமுக தொண்டரின் மனசாட்சி எதிரொலியாக, பொதுக்குழுவில் பேசுகின்ற வாய்ப்பு பெறுவோரின் கருத்துகள் அமைவதே திமுகவில் வழக்கம். அது இந்தக் காணொலி நிகழ்விலும் தொடரும்.

அவரவர் மாவட்டத்திலும் காணொலி நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் எவை என்பது, முரசொலியில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட - ஒன்றிய - நகர -பேரூர் - கிளை திமுகவுக்கும், அது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அவரவர் பங்கேற்க வேண்டிய இடங்களுக்கு, பொதுக்குழு கூடுகின்ற நேரத்திற்கு முன்பாகவே சென்று, அலைபேசியினைக் கட்டாயம் தவிர்த்து, காணொலித்தளத்தில் இணைந்ததைப் பதிவு செய்து, முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஜனநாயகக் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் பாசறையாக அமையவிருக்கிறது திமுக பொதுக்குழு. அதில் உங்களின் ஒருமனதான ஆதரவுடன் நிறைவேறவிருக்கிற தீர்மானங்கள், திமுகவின் செயல்பாடுகளை மேலும் திடப்படுத்தி வலுப்படுத்தும்.

அந்த வலிமையும், அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவும், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் நாம் பெறப்போகும் வெற்றிக்குக் கட்டியம் கூறும். அந்த வெற்றி முழக்கத்தை, தலைவர் கருணாநிதியின் ஓய்விடத்தில் உரக்க ஒலிப்பதற்கான, கொள்கை முழக்கக் களமான பொதுக்குழுவில் பங்கேற்றிட, உங்களில் ஒருவனாக உவகை பொங்கிட அழைக்கிறேன்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x