

இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாளின் மகன் விவேக்கை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு அருகிலேயே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை பள்ளி வளாகத்துக்குள் வீசிச் செல்வதாக புகார் எழுந்தது. இது பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகிறது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மதுபானக்கடையை அகற்ற இளம்பிள்ளை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவிர, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுசம்பந்தமாக புகாரும் கொடுக்கப்பட்டது. எனினும், சம்பந்தப்பட்ட கடையை அகற்றவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றம் செய்யவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இச்சூழலில் குறிப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி சசிபெருமாளின் மகன் விவேக் நேற்று காலை டாஸ்மாக் கடைமுன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மகுடஞ்சாவடி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதை விவேக் ஏற்காததால், அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே பள்ளி அருகில் மதுபானக் கடை செயல்பட்டதால், அடுத்த கட்டமாக மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.