

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, ஓட்டப்பிடாரம் வட்டங்களில் ஏராளமான காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள காற்றாலைகளில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பிரேம்குமார் தலைமையில் போராட்டம் நடந்தது.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர், கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை, மாவட்ட பொதுச் செயலாளர் முத்து, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள், மாவட்ட சேவாதளம் சக்திவிநாயகம், தகவல் அறியும் பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகர், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் முழங்கினர்.
தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கிய மனுவில், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் வட்டங்களில் விதிமீறல் செய்து அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை அகற்ற வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும், மரபுசாரா எரிசக்தி துறையின் கீழ் இயங்கி வரும் திட்டங்களுக்கு விதி விலக்கு அளித்த சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாளை மறுநாள் (9-ம் தேதி) கயத்தார் வட்டம் அகிலாண்டபுரம் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என தெரிவித்திருந்தனர்.