

கல்வி ஒன்றே அழியாத செல்வம், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
விருதுநகர் மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு இவ் விருதுக்கு மலையடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா, தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஜோதிமணி ராஜன், ராஜபாளையம் திருவள்ளுவர் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், மம்சாபுரம் சி.நா. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தேரிச்செல்வம், விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், முதலிப்பட்டி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரா வித்தியாலயா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பவுல், சிவகாசியின் காரனேசன் காலனி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ராமலட்சுமி, விருதுநகர் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லத்தாய், சிவகாசி ஆசாரி காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை சுப்புலட்சுமி, கரைவிளைந்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பொன்மலர், விருதுநகர் சூலக்கரை கே.வி.எஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் சுகந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விருதுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, கல்வி ஒன்றே அழியாத செல்வம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். பெற்ற பிள்ளை போல் வகுப்பறையில் உள்ள அனைத்து பிள்ளைகளும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஆசிரியர்கள்.
ஆசிரியர்கள் பணி அறப்பணி. விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் சமுதாயப் பணியையும் இணைந்து மேற்கொண்டுள்ளது பாராட்டுக்குரியது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.