

தயாநிதிமாறன் இந்தியில் உரையாடியதை நேரில் பார்த்து ரசித்து மகிழ்ந்தவர் கருணாநிதி எனவும், ஆனால் தமிழகத்தில் தமிழர்கள் இந்தி கற்பதை திமுக எதிர்க்கிறது என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் நடைபெற்றுள்ள மோசடி தொடர்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இன்று (செப். 7) மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் மனு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறும்போது, "ஏழை விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் நலனை காக்க ஆண்டுக்கு ரூபாய் 6,000 உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில் சில கருப்பு ஆடுகள் ஓட்டையிட்டு இந்த திட்டத்தை வேறு நபர்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இது தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தவறு செய்தவர்கள் மீது தண்டனை வழங்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். இன்று கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் எங்கள் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது நமது மாநிலத்தில் முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் முறைகேடு நடந்திருந்தால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
மத்திய அரசு கேஸ் சிலிண்டருக்கு வழங்கும் நேரடி மானியத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் இல்லை. கரோனா ஊரடங்கு காலத்திலும் இலவச கேஸ் சிலிண்டரை மத்திய அரசு வழங்கியது. மத்திய அரசு எதை செய்தாலும் தமிழகத்தில் இட்டுகட்டுவது எதிர்கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. அம்பானி வாங்கிய சிலிண்டருக்கு மானியத்தை ரத்து செய்து ஏழைகளுக்கு வழங்கினார் என பாராட்டவில்லை. எந்த நல்லதையும் பாராட்டாத கூட்டணி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள். அவர்களிடம் இருந்து எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடந்த தேர்தலில் பொய்யை கூறி வெற்றிபெற்றவர்கள் இனி எந்த தேர்தலிலும் வெற்றிபெற முடியாது.
மத்திய அரசு ஜிஎஸ்டி தொகையை வசூல் செய்து மாநிலங்களுக்குத் தர மறுக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொய்யுரைகளுக்குத் தமிழக அரசு பலியாகிவிடக்கூடாது. தமிழகத்துக்கான நிதியை பெற்றுத்தருவதில் தமிழக அரசுடன் பாஜக அரசு ஒத்துழைக்கும்.
எல்லா மாநிலங்களுக்கும் நிதி அளிக்கும்போது தமிழகத்துக்கும் வந்து சேரும். பல தடைகளை தாண்டி சரிந்துகொண்டிருக்கும் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. நடைமுறை சிக்கல்களை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு மீது தொடர்ந்து குறை கூறுவது ஏற்புடையது அல்ல.
தமிழர்கள் அறிவு பெற்றுவிடக்கூடாது என்பதில் திமுக கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இந்தி தெரிந்தால் திராவிட இயக்கங்களுக்கு இங்கு வேலை இல்லை. தமிழை தவிர வேறு எதுவும் கற்றுவிடக்கூடாது என்று கூறும் இவர்கள் மட்டும் இந்தி கற்பார்கள். இந்த நேரத்தில் கருணாநிதியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. சோனியா, ராகுலிடம் தயாநிதிமாறன் இந்தியில் சரளமாக உரையாடியதை பார்த்தேன், கேட்டேன், ரசித்தேன், மனம் மகிழ்ந்தேன் என்று கூறினார். ஆனால், அப்பாவி ஏழைகள் மட்டும் இந்தி படிக்கக்கூடாது என திமுக கூறுகிறது.
இந்தி படிப்பதால் தமிழை தூக்கி எறிய வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் இந்திய பிரதமர்களிலேயே மோடிதான் முக்கியமானவர். 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழகத்தின் விருந்தோம்பலை உலகம் எங்கும் கொண்டு சென்றவர் பிரதமர் மோடிதான்" என்று தெரிவித்தார்.