Published : 07 Sep 2020 12:23 PM
Last Updated : 07 Sep 2020 12:23 PM

அலையாத்திக் காடுகளை அழித்து சூழலிய அழிவில் சூழலியல் பூங்கா அமைப்பதா?- சூழலியல் ஆர்வலர்கள் வேதனை

இயற்கை அழகைக் காட்சிப்படுத்துவதற்காகக் கட்டப்பட்டு வரும் சூழலியல் பூங்காவுக்காக இயற்கை அழகுடன் ஓங்கி உயர்ந்து, வளர்ந்து நிற்கும் அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டிருப்பது நியாயமில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

கன்னியாகுமரி அருகே உள்ள கீழமணக்குடி கடற்கரை கிராமத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூழியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கடலும், ஆறும் கலக்கும் பொழிமுகம் பகுதியில் இருக்கும் அலையாத்திக் காடுகளை கண்டு ரசிக்க, சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என்பதாலேயே இந்தப் பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டுவருகிறது. ஆனால், வேலியே பயிரை மேய்ந்தது போல் அந்த அலையாத்திக் காடுகளின் ஒரு பகுதியைச் சூழலியல் பூங்கா அமைப்பதற்காக அழித்து வருவது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துக் குமரி மாவட்ட நுகர்வோர் சங்கத் தலைவரும், இயற்கை ஆர்வலருமான எஸ்.ஆர்.ஸ்ரீராம் இந்து தமிழ் திசை இணையத்திடம் கூறுகையில், 'குமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரைச் சாலையில் மணக்குடி பாலம் உள்ளது. இதன் இருபுறங்களிலும் சூழலியல் பூங்கா அமைக்கக் கடந்த 2017-ம் ஆண்டு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக முதல்வர் அறிவித்தார். இதையடுத்துப் பூங்கா அமைக்கும் பணிகள் இப்போது நடந்துகொண்டு இருக்கின்றன. இந்த பணிகள் தொடங்கும் முன்பு அலையாத்திக்காடுகள் நிறைந்து மிகவும் ரம்மியமாக இருந்தது. இந்த நீராதாரப் பகுதியில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வந்த அலையாத்தி காடுகளில் ஒரு பகுதி, இப்போது வெட்டி அழிக்கப்பட்டுள்ளது. சூழலியலை அழித்துவிட்டுச் சூழலியல் பூங்கா அமைப்பது வேதனையாக இருக்கிறது.

அதேபோல் மிச்சம் இருக்கும் அலையாத்திக் காடுகளைப் பார்த்து ரசிக்க சுற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மண்ணைப் பூங்கா குளத்தில் இருந்தே எடுத்திருக்க வேண்டும். அதுதான் சூழலியலின் அடிப்படைத் தத்துவம். ஆனால், மலையில் இருந்து எடுக்கப்பட்ட பாறைப்பொடி உள்ளிட்ட மண்ணைக் கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள். இந்த சரிவுப் பகுதியில் இனி மரம், செடி எது நட்டாலும் வளராது. அலையாத்திக் காடுகளால் இந்தப் பகுதியில் கூடுதல் ஆக்ஸிஜன் கிடைப்பதோடு மீன்வளமும் அதிகரிக்கும். 12 ஆண்டுகள் வளர்ந்த இந்த அலையாத்திக் காடுகளை அழித்திருப்பது வேதனை தருகிறது.

இந்த இடத்துக்கு உரிமைப்பட்ட மீன்வளத் துறையும், அலையாத்திக் காடுகள் அழிந்துபோனது குறித்து வனத்துறையும் கண்டு கொள்ளாதது வேதனை தருகிறது. குமரிக்கு ஏப்ரல், மே மாதங்களில்தான் அதிக சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். அப்போது இந்த படகுப் போக்குவரத்துடன் கூடிய சூழலியல் பூங்காவின் குளத்தில் தண்ணீரே இருக்காது. மணக்குடி காயல் கடலில் சென்று கலக்கும் இடத்தில் பெரிய அளவில் பம்புசெட் ரூம் அமைத்துக் கடலில் கலக்கும் நன்னீரைத் திருப்பி விட்டிருக்க வேண்டும். அதைக்கூட இந்தப் பணியில் செய்யவில்லை.

தண்ணீர் உள்ளே வரும் மடையை விட, வெளியே செல்லும் மடை பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு, பணி எப்போது முடிக்கப்படும் என்பது உள்ளிட்ட விவரப் பலகைகூட வைக்கவில்லை. எனவே, பெயரளவுக்கு நடக்கும் சூழலியல் பூங்கா பணிகளை முறையாக ஆய்வு நடத்தி, பணிகளைத் தொடர வேண்டும் எனத் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன்'' என்றார்.

மணக்குடி காயலில் அலையாத்திக் காடுகளை உருவாக்கிய 'ஹீல்' தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான சிலுவை வஸ்தியான் இதுகுறித்து கூறுகையில், ''கிளிப்பிள்ளையை வளர்த்துப் பூனை கையில் கொடுத்த கதையாக என்று கிராமப் பகுதியில் பழமொழி சொல்வார்கள். அதேபோல் மிகவும் கஷ்டப்பட்டு இந்த அலையாத்திக்காடுகளை வளர்த்துக் கொடுத்தோம். குப்பைமேடாகக் கிடந்த இந்த இடத்தை மிகவும் சீர்படுத்தி, கருவேல மரங்களை வெட்டி அகற்றி சூழலியல் பூங்காவுக்கான திட்டத்தையும் தயாரித்துக் கொடுத்தோம். ஆனால், 12 வருடங்களாகப் போராடி வளர்த்த அலையாத்திக் காடுகளையே பூங்கா கட்டுமானப் பணிக்காக வெட்டி அகற்றி இருக்கிறார்கள். அதிகாரிகள் இந்தத் திட்டத்துக்காக டெண்டர் விட்டதோடு சரி, பணிகள் குறித்து எவ்வித மேலாண்மையும் செய்யவில்லை.

இந்தப் பகுதியில் அலையாத்திக் காடுகள் இருப்பது மண் அரிப்பைத் தடுக்கும். பேரலைகளினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். சுனாமி தாக்கிய பகுதிகளில் கூட அலையாத்திக்காடுகளே அரணாக இருந்தன. தெளிவான திட்டமிடல் இல்லாமல் சூழலியல் பூங்காவுக்கான வேலைகள் நடக்கிறது. இங்கு படகு சவாரி விடும் வகையில் படகுத் துறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஆதாரமான குளம் ஆழப்படுத்தப் படவில்லை.

சூழலியல் பூங்கா அமைக்கச் சூழலியலைக் கெடுத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அலையாத்திக் காடுகளை உருவாக்குவது எத்தனை கஷ்டம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவில்லை'' என்றார்.

இது குறித்து விளக்கம்பெற மீன் வளத்துறை அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்த போது, நேரில் சென்று ஆய்வுசெய்துவிட்டுத் தகவல் சொல்வதாக சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x