ஆசிரியர்களின் நிலையை உயர்த்த உறுதியேற்போம்: ராமதாஸ்

ஆசிரியர்களின் நிலையை உயர்த்த உறுதியேற்போம்: ராமதாஸ்
Updated on
1 min read

ஆசிரியர்களின் நிலையை உயர்த்தவும், அவர்களின் உதவியுடன் தமிழகத்தில் தரமான, தமிழ் மொழி வழிக் கல்வியை வழங்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து , இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகத்திற்கு ஏற்றம் தரும் ஏணியாக திகழும் ஆசிரியர்களின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது.

ஊதிய முரண்பாடுகளை களைதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட ஆசிரியர்களின் நலனுக்கான பல்வேறு வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்குக் கூட ஆட்சியாளர்கள் முன்வராத நிலை தான் தமிழகத்தில் காணப்படுகிறது.

இந்த நிலையை மாற்றி ஆசிரியர்களின் நிலையை உயர்த்தவும், அவர்களின் உதவியுடன் தமிழகத்தில் தரமான, தமிழ் மொழி வழிக் கல்வியை வழங்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம்" எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in