

பாரம்பரிய காய்கறிகளின் விதைகளை மீட்டெடுத்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (32). டிப்ளமோ படித்த இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆனால், பெற்றோரைப் பார்த்து, விவசாயத்தில் ஏற்பட்ட ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டு முழு நேர விவசாயியாக முனைப்புடன் செயலாற்றி வருகிறார்.
இவர் முன்னோர் பயன்படுத்திய பாரம்பரியக் காய்கறிகளை மீட்டுருவாக்கம் செய்வதற்காக, அவற்றின் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
இதுகுறித்து சரவணக்குமார் கூறியதாவது:
பருத்தி சாகுபடி செய்து வருவதோடு, நர்சரி கார்டனும் நடத்தி வருகிறேன். பாரம்பரியக் காய்கறிகளில்தான் சத்துக்கள் அதிகம். கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக் காய்கறி ரகங்களை பல்வேறு இடங்களுக்கும் சென்று சேகரித்து மீட்டுருவாக்கம் செய்து விதைகளைச் சேகரித்தேன்.
அதோடு, நாட்டு கொத்தமல்லி, கீரை வகைகள், கொத்தவரங்காய், நாட்டு முள்ளங்கி போன்ற காய்களையும் பயிர் செய்து வருகிறேன். இதுவரை 12,256 விவசாயிகளுக்கு இலவசமாக விதைகளை வழங்கியுள்ளேன். 600-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து நாட்டு காய்கறி விதைகளை பெற்றுச்செல்கிறார்கள்.
வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைப்பவர்களுக்கும் இலவசமாக விதைகளை வழங்கி பயிரிடும் முறைகளையும் சொல்லித் தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.