Published : 07 Sep 2020 11:01 AM
Last Updated : 07 Sep 2020 11:01 AM

அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு உடனே பணி நிலைப்பு வழங்க வேண்டும்; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு உடனே பணி நிலைப்பு வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 7) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் பகுதிநேரமாக பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். பகுதி நேர ஆசிரியர்களின் 8 ஆண்டு கால கோரிக்கையை பரிசீலிக்கக் கூட அரசு முன்வராதது மிகவும் வேதனையளிக்கிறது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. ஆனால், அவர்கள் நடத்தப்படும் விதமும், அவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படும் விதமும் மிகவும் மோசமானவை. பகுதி நேர ஆசிரியர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக இருந்தாலும் கூட, அவர்களுக்கு உதவ ஆட்சியாளர்களுக்கு மனம் வராதது வருத்தம் அளிக்கிறது.

தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் எவரும் கருணை அடிப்படையில் நியமிக்கப்படவில்லை.

மாறாக, 05.03.2012 அன்று தமிழக அரசு பிறப்பித்த அறிவிக்கையின்படி வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது. இதற்காக இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அன்றைய நிலையில் மாதம் ரூ.20 ஆயிரம் வருவாய் ஈட்டலாம்; காலப்போக்கில் பணி நிலைப்பு கிடைக்கும் என்பதால் தான் அவர்கள் பணிக்கு சேர்ந்தனர். இல்லாவிட்டால் ரூ.5,000 ஊதியத்துக்கு எவரும் பணிக்கு வந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், இதுவரை 8 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் அவர்கள் பணி நிலைப்பு செய்யப்படவில்லை. அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 7 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.

2014-ம் ஆண்டில் நான் வலியுறுத்தியதை ஏற்று தான் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தினார். பின்னர் ஊதியம் ரூ.7,700 ஆக உயர்த்தப்பட்டது. ஆனாலும், அவர்களின் பணி நிலைப்பு கோரிக்கை மட்டும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை; அவர்களின் துயரக்கதை தொடர்கிறது.

பணி நிலைப்புக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை வைப்பதும், அவ்வப்போது போராட்டம் நடத்துவதும், அப்போதெல்லாம் அவர்களிடம் பேச்சு நடத்தும் அதிகாரிகள், 'உங்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்கிறோம்' என வாக்குறுதி அளிப்பதும் வாடிக்கையாகி விட்டன.

ஆனால், 8 ஆண்டுகளில் ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்கவில்லை; ஏமாற்றங்களே பரிசாக கிடைத்து வருகின்றன. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டும் தான் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆசிரியரும் நான்கு பள்ளிகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு இன்றைய நிலையில் மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியமாக கிடைத்திருக்கும். ஒரு கட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் இரு பள்ளிகளில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

எந்த விதமான கல்வித் தகுதியும் தேவைப்படாத, எத்தகைய பொறுப்பும் இல்லாத சாதாரண பணிகளுக்குக் கூட மாதம் ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், பட்டப்படிப்பும், பட்டயப் படிப்பும் முடித்த பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.7,700 ஊதியத்திற்கு மாதம் முழுவதும் பணியாற்ற வேண்டும் என்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும். அரசே ஆசிரியர்களை இப்படி அலைக்கழிக்கக்கூடாது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்வது குறித்து குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என்று கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.

அதன்பின் மூன்று ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும், அதற்கான பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு தெரிவித்தனர். ஆனால், அதுவும் நடக்கவில்லை என்பது தான் வேதனை.

பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக்குறைந்த ஊதியத்தில் அவதிப்பட்டு வருவதற்கு முடிவு கட்ட வேண்டும். அதை செய்ய அரசுக்கு பெரிய அளவில் செலவு ஆகிவிடாது. எனவே, பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும் 12 ஆயிரம் பேருக்கும் பணி நிலைப்பு அளித்து, காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x