

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மூல வைகையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வைகை ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளான வெள்ளி மலை, பொம்மராஜபுரம், அரசரடி, இந்திரா நகர், காந்தி கிராமம் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும் மழையால் மூல வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று காலை நிலவரப்படி வைகை அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 545 கன அடி நீர் வரத்து உள்ளது. 972 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 61.32 அடியாக (மொத்த கொள்ளளவு 71) உள்ளது. முல்லை பெரியாறு அணையில் 126.4 அடி நீர்மட்டம் உள்ளது. நீர்வரத்து 912 கன அடியாகவும், வெளியேற்றம் 1,200 கன அடியாகவும் உள்ளது. சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிக ரித்துள்ளது.
திண்டுக்கல் :
மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை அதிகமாகப் பெய்து வருகிறது. மலைப்பகுதிகளில் பரவலாகப் பெய்யும் மழை தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாநதி அணை, ஆத்தூர் நீர்த்தேக்கம், பழநி அருகேயுள்ள பாலாறு பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, பரப்பலாறு அணை ஆகியவற்றுக்கு நீர்வரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரதமாநதி அணை கடந்த வாரமே முழுக் கொள்ளளவான 66.47 அடியை எட்டியதால் உபரிநீரால் ஆயக்குடி பகுதி கண்மாய்கள் நிரம்ப வாய்ப்புள்ளது.
பாலாறு பொருந்தலாறு அணை யின் நீர்மட்டம் 43 அடி. (மொத்தம் 65 அடி).
குதிரையாறு அணையின் நீர்மட்டம் 49.70 அடி. (மொத்தம் 76.99 அடி). ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணை நீர்மட்டம் 68.75 அடி. (மொத்தம் 90 அடி). அய்யம்பாளையம் அருகேயுள்ள மருதாநதி அணை நீர்மட்டம் 48 அடி. (மொத்த நீர்மட்டம் 74 அடி).