Published : 07 Sep 2020 10:23 AM
Last Updated : 07 Sep 2020 10:23 AM

இறந்தவர்களின் இறுதிச் சடங்குக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கும் இளைஞர்: வெளிநாட்டிலிருந்தவாறு நண்பர்கள் உதவியுடன் சேவை

அதிராம்பட்டினம் பகுதியில் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறார் வெளிநாட்டில் உள்ள இளைஞர் ஒருவர்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சா.சம்சுல்ரஹ்மான்(29). சமூக ஆர்வலரான இவர், ஏழை, எளிய குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, திருமண உதவி, பேரிடர் காலங்களில் வாழ்வாதார உதவி என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

ஜப்பான் நாட்டில் தற்போது பணியாற்றி வரும் சம்சுல்ரஹ்மான், தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் அதிரை ஒற்றுமை நலச் சங்கம் என்ற அமைப்பின் மூலம் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தும் மரக்கட்டில், தண்ணீர் தேக்கி வைக்கும் டிரம், இறந்தவர் உடலை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி, சாமியானா பந்தல், நாற்காலிகள், மின் விளக்குகள், தேனீர் கேன், ஸ்டீல் டேபிள் உள்ளிட்ட 9 வகை பொருட்களை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

கடந்த ஒரு மாத காலமாக அதிராம்பட்டினம் பகுதியில் இந்த சேவையை செய்து வரும் சம்சுல்ரஹ்மானின் செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இறுதி சடங்குகளுக்கு தேவையான பொருட்களை பராமரித்து வரும் சி.அகமது, நவாஸ் ஆகியோர் கூறியது: இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு தேவையான அத்தியாவசியமான சில பொருட் களை வாங்கவும், சில பொருட்களை வாடகைக்கு எடுக்கவும் ரூ.20 ஆயிரம் செலவாகும். எனவே, பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்த வரும் பயன் படுத்தும் நோக்கத்தில் சம்சுல்ரஹ்மான் ரூ.1.5 லட்சம் செலவில் இந்த பொருட்களை வாங்கி, தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்க கூறியதன்பேரில், நாங்கள் இதை செய்துவருகிறோம். தற்போது 9 வகை யான பொருட்களை நாங்கள் வாங்கி வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்.

இதுதவிர, அவசரகால மருத்துவ சேவைக்காகவும், இறந்தவர் உடலை எடுத்துச் செல்லவும் ஆம்புலன்ஸ் வாகனம், மின்தடையின்போது இறந்தவர் வீடுகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குதல், இறந்தவர் வீடுகளுக்கு சுமை வாகனம் மூலம் பொருட்களை ஏற்றிச் செல்லுதல் ஆகிய சேவைகளை ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளோம் என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x