

கோவை பீளமேடு ஹோப்காலேஜ் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் தந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவர் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக முடிவு வெளியானது. யாருக்கும் அறிகுறிகள் இல்லாததால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டனர்.
இதையடுத்து, வீட்டைச் சுற்றிலும் மாநகராட்சி சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் நால்வருக்கும் தனியார் ஆய்வகத்தில்பரிசோதித்தபோது, ‘நெகட்டிவ்' என பரிசோதனை முடிவு கிடைத்துள்ளது. இதனால் கோபமடைந்த குடும்பத்தினர், மாநகராட்சியைக் கண்டிக்கும் நோக்கில், தனியார் ஆய்வக முடிவை பேனராக வீட்டின் முன்பு வைத்துள்ளனர். ‘கரோனா இல்லாத 4 பேருக்கு தொற்று இருப்பதாக முத்திரை குத்தி, அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துகள்' என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறையினர் கூறும்போது, “பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் ஏதுமில்லை. மேலும், முதல் பரிசோதனை முடிவு வெளியான சில நாட்களுக்குப் பிறகுதான், தனியார் ஆய்வகத்தில் இரண்டாவதாக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். எனவே, அந்த முடிவு வேறுபட்டிருக்கலாம். மேலும், குடும்பத்தில் ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ள சூழலில், அந்த வீட்டை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதுதான் விதிமுறை. எனவே, எங்கள் தரப்பில் எந்த விதிமீறலும் இல்லை" என்றனர்.