

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக முகப்பில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதிரி பூங்கா கழிவுநீர் குட்டையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் பொதுமக்கள் நடந்து செல்லும் இருபுறங்களிலும் மாவட்ட வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக கடந்த 2002-ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்காவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரம் வளர்ப்பு, வீட்டில் தூய்மையை கடைபிடிப்பது எப்படி? வீடுகளில் கழிவறைகளை அமைப்பது, பராமரிப்பது போன்ற மாதிரிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இந்த பூங்காவை விழுப்புரம் பொதுப்பணித்துறையினர் ஒப்பந்த அடிப்படையில் பரா மரித்து வந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்ததாரரும் பராமரிப்பை தொடரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பூங்கா பொலிவிழந்து ஆட்சியர் அலுவலகம் வரும் மக்களின் இயற்கை உபாதைப் பகுதியாக மாறிவிட்டது. மேலும், மழைநீர் மற்றும் ஆட்சியர் அலுவலக கழிவு நீரும் தேங்குவதால் துர்நாற்றம் வீசும் குட்டையாகி விட்டது. ஆட்சியர் வளாக குப்பைகளும் இந்த பூங்காவில் தான் கொட்டப் படுகின்றன.
அந்த பகுதியில் துர்நாற்றம் ஆட்சியர் அலுவலக ஊழியர் களும், பொதுமக்களும் அவதிப் படுகின்றனர். ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் உள்ளிட்டோர் தினந்தோறும் அந்த வழியாகத் தான் சென்று வருகின்றனர். இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீராவிடம் கேட்டபோது, “பூங்கா நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், அப்பகுதியை பார்வையிட்டு கழிவு நீரை அகற்ற நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என்றார்.
இது தொடர்பாக, விழுப்புரம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ் வரியிடம் கேட்டபோது, பூங்கா பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, பொதுப்பணித் துறையினரிடம் இது குறித்து எடுத்துக் கூறப்படும் என்றனர்.