ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம்: அன்புமணி ராமதாஸ் பேச்சு
Updated on
2 min read

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு போராட்டம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் பா.ம.க. முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்று பேசினார்.

அவரது உரை விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் மது குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 30 ஆக இருந்தது. ஆனால், இப்போது படிப்படியாக குறைந்து 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மது குடித்துவிட்டு பெண்களும், மாணவ, மாணவிகளும் தகராறு செய்யும் சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் யார்? என்பது உங்களுக்குத் தெரியும். மதுக்கடைகளை திறந்து மதுவை அறிமுகம் செய்தவர் கலைஞர். டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் திறந்து மக்களை குடிக்க வைத்தவர் ஜெயலலிதா.

காமராஜர் முதலமைச்சராக இருந்த போது தமிழகம் முழுவதும் 12,000 பள்ளிக்கூடங்களைத் திறந்தார். ஆனால், கடந்த 44 ஆண்டுகளில் திமுக, அதிமுக அரசுகள் 7000 மதுக்கடைகளை திறந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பெண்களின் எதிர்பார்ப்பு மதுவிலக்காகத் தான் இருக்கிறது. மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான். மது குடிப்பதற்காக வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. வீட்டில் நகை இல்லை, பணம் இல்லை, புடவை கூட இல்லை என பெண்கள் புலம்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

உலகிலேயே சாராய விற்பனையை நம்பி அரசாங்கம் நடப்பது தமிழகத்தில் மட்டும் தான். தமிழகத்தின் மொத்த வருவாயான 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியில் 36,000 கோடி ரூபாய் மது விற்பனை மூலம் கிடைக்கிறது. இது மிகப்பெரிய அவலம் ஆகும். இந்த பணத்தைக் கொண்டு தான் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மதுப்பழக்கம் சமூகத்தை அழிக்கக்கூடியது ஆகும். மது குடிப்பதால் 200 வகையான நோய்கள் ஏற்படுகின்றன. இந்தியாவிலேயே கல்லீரல் இறுக்க நோயால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். மதுவிலக்கு என்பது அரசியல் பிரச்சினை இல்லை, சமூக பிரச்சினை. பா.ம.க. தான் மதுவுக்காக தொடக்கம் முதலே போராடிவருகிறது. 1989 ஆம் ஆண்டு பா.ம.க. தொடங்கப்பட்ட போது நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானமே மது விலக்கு கோருவது தான். இப்போது கூட முதல் நாள்... முதல் கையெழுத்து... பூரண மதுவிலக்கு என்று சுவரொட்டிகள் அடித்து மாநிலம் முழுவதும் ஒட்டியிருக்கிறோம்.

மதுவுக்கு எதிராக இங்கிருந்து (வள்ளியூர்) 70 கி.மீ. தொலைவில் உள்ள மார்த்தாண்டம் உண்ணாமலைக் கடையில் தான் போராட்டம் நடத்தி சசிபெருமாள் உயிர்நீத்தார். மதுவுக்கு எதிராக 35 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது. மக்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இதற்குக் காரணம் மக்கள் நலனில் அ.தி,மு.கவுக்கு அக்கறை இல்லை என்பது தான்.

அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று கலைஞர் அறிவித்துள்ளார்.

ஆனால், அதிக மது ஆலைகளை நடத்துபவர்களே திமுகவினர் தான். தமிழகத்தில் மொத்தம் 10 மது ஆலைகளை அரசியல் கட்சியினர் நடத்துகின்றனர். அவற்றின் 5 ஆலைகளை திமுகவினர் நடத்துகின்றனர். 3 ஆலைகளை அதிமுகவினர் நடத்துகின்றனர். இரு ஆலைகளை காங்கிரஸ் கட்சியினர் நடத்துகிறார்கள். தி.மு.க.வினரின் மது ஆலைகளை மூடினாலே 50% மது விலக்கு நடைமுறைக்கு வந்து விடும். ஆனால், மதுவிலக்கு வந்தால் தான் இவர்கள் மது ஆலைகளை மூடுவார்களாம்.

மதுவிலக்கு வருவதற்கு 10 மாதங்கள் ஆகும் என்றால், அதற்குள் திமுக சார்பு மது ஆலைகள் தயாரிக்கும் மதுவைக் குடித்து 80 ஆயிரம் பேர் இறப்பார்கள் என்பதால் மது ஆலைகளை மூடுங்கள் என்று மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி மன்றாடினேன். இதுவரை அவரிடமிருந்து பதில் வரவில்லை.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் முடியும்.

2016 ஆம் ஆண்டில் ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் . இது பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் சாத்தியம் என்று அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தேர்தல் பிரச்சாரக்குழுத் தலைவர் எதிரொலி மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in