Published : 07 Sep 2020 08:52 AM
Last Updated : 07 Sep 2020 08:52 AM

விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் நாமக்கல்லில் 340 பேர் போலி ஆவணம் மூலம் மோசடி: வேளாண் துறையினர் தொடர் ஆய்வு

விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 340 பேர் போலி ஆவணம் வழங்கி மோசடி செய்திருப்பது வேளாண் துறையினர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 83 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இத்திட்டத்தில் போலி ஆவணங்களை வழங்கி பயன்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், நாமக்கல் மாவட்டத்திலும் மோசடி நடந்திருப்பது வேளாண் துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விவசாயிகள் வழங்கிய ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில் இதுவரை 340 பேர் போலி ஆவணங்கள் வழங்கி விவசாயிகள் என்ற பெயரில் பணம் பெற்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் சந்தேகத்துக்குரிய 1,300 வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதில் 340 பேர் போலி ஆவணம் கொடுத்து பயன்பெற்றிருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வு நாளை (8-ம் தேதி) வரை நடைபெற உள்ளது. அதன்பின்னரே போலி ஆவணம் மூலம் பயனடைந்த நபர்கள் குறித்த முழு விவரம் தெரியவரும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x