Published : 07 Sep 2020 08:46 AM
Last Updated : 07 Sep 2020 08:46 AM

தருமபுரியில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு: அமைச்சர் மீது திமுக எம்.பி. புகார்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் தும்பல அள்ளி ஊராட்சிக்குஉட்பட்ட கணபதி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி (65). இவரது நிலத்தை ஒட்டிய அரசு புறம்போக்கு நிலமும் சின்னசாமியின் பயன்பாட்டில் இருந்துள்ளது.

அப்பகுதியில் ஏற்கெனவே உள்ள மண் சாலையை தார்சாலையாக மாற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், கடந்த 4-ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடு செய்ய முயன்றனர். அப்போது விவசாயி சின்னசாமி, அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்தார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 5-ம் தேதி இரவு உயிரிழந்தார்.

அவரது உறவினர்கள், உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லா கான் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, உறவினர்கள் சின்னசாமியின் உடலை நேற்று மாலை பெற்றுச் சென்றனர்.

சின்னசாமியின் குடும்பத்தாருக்கு நேற்று ஆறுதல் கூறிய தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடுத்த அழுத்தமே இந்த சம்பவத்துக்கு காரணம். இதற்கு காரணமான வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் தொடர்பாக பாலக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இப்படியொரு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x