Published : 07 Sep 2020 08:41 AM
Last Updated : 07 Sep 2020 08:41 AM

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அரசு பணத்தை வீணடிக்கும் அதிகாரிகள்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

உரிய சட்ட அறிவு பெறாமல் மேல்முறையீடு என்ற பெயரில் வழக்கு முடியும் வரை செலவுக்காக அரசு பணத்தை அதிகாரிகள் வீணடித்து வருகின்றனர் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரூர் மின்வாரிய செயலாக்கம் மற்றும் பராமரிப்புப் பிரிவு செயற் பொறியாளராகப் புணிபுரிந்தவர் எஸ்.வேல்முருகன். இவர் நீலகிரி மாவட்டம் குந்தா மின் உற்பத்திப் பிரிவு செயற் பொறியாளராக 29.6.2018-ல் இடமாறுதல் செய்யப்பட்டார்.

இடமாறுதலை ரத்து செய்யக்கோரி வேல்முருகன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, இடமாறுதல் உத்தரவுக்கு தடை விதித்தார். மேலும் மனுதாரரை ஒரு வாரத்தில் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும், மனுதாரர் பணியில் இல்லாத காலத்தை பணிக் காலமாகக் கருதி சம்பளம் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என 27.11.2019-ல் உத்தரவிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இந்த உத்தரவை 2 ஆண்டுகளாக நிறைவேற்றாத மின்வாரிய உயர் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வேல்முருகன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரை 2 ஆண்டுகளாக மின்வாரியம் பணியில் சேர்க்கவில்லை. தற்போது நீதிமன்ற உத்தரவை 8 வாரத்தில் நிறைவேற்றுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மனுதாரருக்கு 2 ஆண்டுகளுக்கான சம்பளம் மற்றும் பணப்பலன் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மின்வாரிய அதிகாரிகள் நிறைவேற்றத் தவறியதால் மனுதாரர் எந்தப் பணியும் செய்யாத நிலையில் அவருக்கு இவ்வளவு பணம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழல் நீதிமன்றத்துக்கு புதியது இல்லை. நீதிமன்றம் எதிர்கொண்டு வருவது தான். உரிய சட்ட ஆலோனை பெறாமல் மேல்முறையீடு பெயரில் முந்தைய உத்தரவுகளை நிறைவேற்ற தாமதப்படுத்தும்போது இறுதியில் சம்பந்தப்பட்ட நபருக்கு எந்த வேலையும் செய்யாமலேயே சம்பளம், அபராதம், பணப்பலன்கள் எனப் பெரிய தொகை வழங்க வேண்டி உள்ளது.

மேலும் மேல்முறையீடு என்ற பெயரில் வழக்கு முடியும் வரை செலவுக்காக அரசு பணம் வீணடிக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த வழக்கில் உரிய சட்ட ஆலோசனை பெற்று மேல்முறையீடு செய்வதற்கு முன்பு முந்தைய உத்தரவை அமல்படுத்தியிருந்தால் வேலை செய்யாமலேயே ஒருவருக்கு ரூ.15 லட்சம் வழங்குவதை தவிர்த்திருக்கலாம். எனவே, மனுதாரரை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். அவருக்கு 6 வாரத்தில் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x