

மனோஜ் முத்தரசு
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் பல மடங்கு அதிகரித்து வருவது தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது ஆண்டுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அதிர்ச்சி புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியானது.
2018-ல் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் தொடர்பாக போக்ஸோ சட்டப் பிரிவு 4, 6-ன் கீழ் போடப்பட்ட வழக்குகளில் 63,636 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஒரு நாளுக்கு109 குழந்தைகள் பாலியல்தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதில் பல சம்பவங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், கட்டப்பஞ்சாயத்து மூலமும் வெளிச்சத்துக்கு வராமலேயே போவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து மாநில குற்ற ஆவண காப்பகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தகவல் கோரப்பட்டிருந்தது. அதன்படி, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. அதாவது, பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது.
2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுக்கு சராசரியாக 16 குற்றங்கள் வழக்குகளாக பதியப்பட்டுள்ளன. 2019-ல் இது 25 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் அல்லாத இடங்களிலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிக அதிகமாகி உள்ளன.
அதாவது, 2013-ம் ஆண்டு 419 ஆக இருந்த பதியப்பட்ட பாலியல் குற்றங்கள், 2014-ல் 1,055 ஆக உயர்ந்துள்ளது. இது 2015-ல் 1,546 ஆகவும் 2016-ல் 1,585 ஆகவும் 2018-ல் 2,052 ஆகவும் 2019-ல் 2,410 ஆகவும் அதிகரித்து வருவது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஆண்டில் ஜூலை வரை 2000-க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு செய்துவரும் சமூக ஆர்வலர் வி.முருகேசன் கூறியதாவது:
பள்ளிகள், பொது இடம், உறவினர்கள் வீடு என குழந்தைகளுக்கு எங்கு வேண்டுமானாலும் பாலியல் தொந்தரவு இருக்கலாம். தனக்கு நேர்ந்தது பாலியல்தொல்லை என்று தெரியாமலேயேபல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பாலியல் தொந்தரவு குறித்து பெற்றோர்களிடம் சொல்ல குழந்தைகள் தயக்கம் காட்டுகிறார்கள் என்று யுனிசெப் அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதையும் மீறி காயங்கள் அல்லது குழந்தைகள் மூலம் பெற்றோருக்கு தெரியவந்தாலும், வழக்காக பதியப்படுவதில்லை. அதையும் மீறி பதியப்படும் வழக்குகள் மிகவும் குறைவு.
இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வருவதற்கு 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட போக்ஸோ சட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பெற்றோர் நேரம் கிடைக்கும்போது தங்களின் குழந்தைகளிடம் அன்பாக பேசினால் மட்டுமே அவர்களுக்கு நேர்ந்த கோரம் தெரியும். அதை செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடாது.
இது பெண் குழந்தைக்குதான்நடக்கும் என்பது தவறு. இந்தியாபோன்ற நாடுகளில் பாலியல்குற்றங்களை 30 சதவீத ஆண்பிள்ளைகளே எதிர்கொள்கின்றனர். பாலியல் குறித்த கல்வி முறைகளை பாடத்திட்டம் மூலமாகவும்பெற்றோர் வழியாகவும் குழந்தைகளுக்கு புகட்டினால்தான், பாலியல் ராட்சசர்களிடம் இருந்து நம்குழந்தைகளை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.