

திருடிய வீட்டில் மகன் பெயரை எழுதி வைத்துவிட்டுச் சென்ற கொள்ளையனை, அதை அடிப்படையாக வைத்தே போலீஸார் துப்பு துலக்கி கைது செய்துள்ளனர்.
ஆரணியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். தனியார் பள்ளி ஆசிரியரான இவர், சென்னை சோழிங்கநல்லூரில் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 27-ம் தேதி தனது சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்றார்.
கடந்த 1-ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் திருடப்பட்டிருந்தன. மேலும், அவரது இருசக்கர வாகனமும் திருடப்பட்டது. அதிர்ச்சி அடைந்த சவுந்தரராஜன் இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
திருட்டில் ஈடுபட்டவர்கள் திருடிவிட்டுச் செல்லும்போது வீட்டின் சுவற்றில் பெயர் ஒன்றை எழுதிவிட்டு சென்றுள்ளனர். இதை கவனத்தில் கொண்டும் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். இந்நிலையில், செம்மஞ்சேரி போலீஸார் அதே பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சுவற்றில் எழுதப்பட்டிருந்த அதே பெயருடன் இருசக்கர வாகனம் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர்.
இதில், பிடிபட்டவர் சூளைமேட்டைச் சேர்ந்த மதன் என்பதும், அவர்தான் தனது நண்பரான ராகுல் என்பவருடன் சேர்ந்து, சவுந்தரராஜன் வீட்டில் திருடியதும், குடிபோதையில் திருட்டில் ஈடுபட்ட மதன் தனது மகன் பெயரை திருடிய வீட்டில் எழுதி வைத்ததோடு, திருடிய இருசக்கர வாகனத்திலும் அதே பெயரை எழுதி இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.