

அனைத்துப் பிரிவு தாழ்வழுத்த மின்நுகர்வோரிடத்திலும் குறிப்பிடப்பட்ட தேதியில் சரியான முறையில் மின்கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கணக்கீட்டாளர்களுக்கும் மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, தென்சென்னை மண்டல பகிர்மானப்பிரிவின் துணை நிதிக் கட்டுப்பாட்டாளர் அனுப்பிய சுற்றறிக்கை:
அனைத்துப் பிரிவு தாழ்வழுத்த மின்நுகர்வோரிடத்திலும் குறிப்பிடப்பட்ட தேதியில்சரியான முறையில் மின்கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக, அனைத்துக் கணக்கீட்டாளர்களுக்கும், கணக்கீட்டு அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
மேலும், 100 சதவீதம் கணக்கீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதா என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இதை அனைத்து அலுவலகங்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும். கணக்கீடு தொடர்பான நுகர்வோரின் கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிக்க வேண்டும்.
அத்துடன், பொதுமுடக்கத்தின்போது பயன்படுத்தப்படாத குறைபாடுடைய மீட்டரைப் பொறுத்தவரை, கவனமுடன் கையாண்டு தொடர்புடைய நுகர்வோரின் பழைய தரவுகளின் அடிப்படையில், நுகர்வோர் பயன்படுத்திய மின்சாரத்தில் சராசரி நுகர்வை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.