Published : 07 Sep 2020 07:11 AM
Last Updated : 07 Sep 2020 07:11 AM

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் திறக்கப்பட்டதால் காசிமேடு மீன் சந்தையில் கட்டுக்கடங்காத கூட்டம்: இறைச்சிக் கடைகளிலும் அலைமோதிய மக்கள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் காசிமேடு மீன் சந்தை திறக்கப்பட்டதால், அங்கு மீன்கள் வாங்க நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. மேலும் நகரம் முழுவதும் மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. அதனால் காசிமேடு மீன் சந்தையில் மீன்கள்விற்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 31 வரைஅனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனாலும் கடந்த இரண்டரைமாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு மீன் சந்தை இயங்கவில்லை.

தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சி சந்தைகளைதிறக்க அரசு அனுமதித்துள்ள நிலையில், முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காசிமேடு மீன் சந்தையில், கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. ஒருவரும் சமூகஇடைவெளியைக் கடைபிடிக்க வில்லை.

கூட்டம் அதிகமாக வந்தது குறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கடந்த 2 மாதங்களாக சனிக்கிழமைகளில், வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருந்தவர்கள் மட்டுமே மீன்களை வாங்கினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீடுகளில் குளிர்சாதன பெட்டிஇல்லாதவர்களும் மீன் வாங்கினர். அதனால் காசிமேடு மீன் சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்தது” என்றனர்.

விலை உயர்வு

மேலும் சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா வளைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் அதிக அளவில் கூட்டம் இருந்தது. இதேபோல் மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டதால் அங்கும் கூட்டம் அலைமோதியது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களாக கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்ட கோழி இறைச்சி நேற்று கிலோ ரூ.240 ஆகவும், ஆட்டு இறைச்சி ரூ.700-லிருந்து ரூ.800 ஆகவும் விலை உயர்ந்து இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x