புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு 3.55 மணி நேரத்தில் வந்த மாற்று கல்லீரல்: மும்பை பெண்ணுக்கு பொருத்தம்

புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு 3.55 மணி நேரத்தில் வந்த மாற்று கல்லீரல்: மும்பை பெண்ணுக்கு பொருத்தம்
Updated on
1 min read

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் இருந்து பெறப்பட்ட கல்லீரல் 340 கி.மீ. தூரம் காரில் பயணித்து 3.55 மணி நேரத்தில் மதுரை கொண்டுவரப்பட்டு, மும்பை பெண்ணுக்கு பொருத்தப் பட்டது.

மும்பையைச் சேர்ந்த சஞ்சய் ஷாவின் மனைவி மாயா ஷா(51). இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட் டிருந்தார்.

இந்நிலையில் 59 வயது பெண் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் சம்மதித்தனர். அவரது கல்லீரல், மாயாஷாவுக்கு பொருந்துவது தெரியவந்தது. இதற்காக முறையான அரசு அனுமதி பெறப்பட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு ஜிப்மர் மருத்துமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலில் இருந்து கல்லீரல் அகற்றப்பட்டது. அப்போலோ மருத்துவமனை மருத்துவர் ஆனந்த் கே.கக்ஹார் தலைமையிலான குழுவினர், கல்லீரலை உரிய பாதுகாப்புடன் பெட்டியில் எடுத்துக்கொண்டு காலை 6 மணிக்கு மதுரைக்கு காரில் புறப்பட்டனர். வழி நெடுகிலும் போலீஸார் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தி காருக்கு வழியேற்படுத்தினர். மதுரை மாவட்டம் அருகே கொட்டாம்பட்டியில் நடந்த ஒரு சாலை விபத்தால் ஒரு கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் நின்றதால் காரில் இருந்து ஆம்புலன்ஸுக்கு கல்லீரல் பெட்டி மாற்றப்பட்டு, மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ஆம்புலன்ஸ் விரைந்து காலை 9.55 மணிக்கு மதுரையை வந்தடைந்தது.

மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர்கள் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மாற்று கல்லீரலை மாயாஷாவுக்குப் பொருத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in