Published : 06 Sep 2020 08:41 PM
Last Updated : 06 Sep 2020 08:41 PM

பாமக பொதுக்குழு கூட்டம்: 20 தீர்மானங்கள் நிறைவேற்றம்

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து, நெல் கொள்முதல் விலையை ரூ.3000 உயர்த்த வேண்டும், 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்கவேண்டும், எட்டு வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (06.09.2020) ஞாயிற்றுக்கிழமை இணைய வழியில் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்றார். பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

தமிழ்நாட்டில் மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சமுதாயம் என்றால் அது வன்னியர்கள் சமுதாயம் தான். தமிழக மக்கள்தொகையில் 25% வன்னியர்கள்தான். முழுமையான சமூக நீதியின் அடிப்படையில் அரசுத்துறை பணிகளில் 25% இடங்கள் வன்னிய மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கு கூட கிடைக்கவில்லை.

தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், நீதியரசர் தணிகாச்சலம் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பரிந்துரை அறிக்கையைப் பெற்று வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்; அதற்கான தனிச் சட்டத்தை சட்டப்பேரவையில் விரைவாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

மத்திய அரசின் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டில் தொகுப்பு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு பிற பிற்படுத்தப் பட்டோர் வகுப்பிலுள்ள அனைத்து சாதியினருக்கும் பயனளிக்கவில்லை.

27% இட ஒதுக்கீட்டின் பயன்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள 2,633 சாதிகளுக்கும் பயனளிப்பதை உறுதி செய்யும் வகையில் 27% இட ஒதுக்கீட்டை 10+10+7 என மூன்று பிரிவுகளாகப் பிரித்து வழங்கலாம் என்றும் நீதிபதி ரோகிணி ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.

மத்திய அரசுப் பணிகளில் ஓபிசிகளுக்கான 27% இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்

மத்திய அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனப்பணிகளில் ஒவ்வொரு நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அவை 27 விழுக்காட்டை விட எந்த அளவு குறைவாக உள்ளனவோ, அவற்றைப் பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வு மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும்.

கிராமப்புற, ஏழை மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்

கரோனா வைரஸ் பரவல் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், குறைந்தபட்சம் நடப்பாண்டிலாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஆறு மாநில அரசுகள் சார்பிலும், பாமக சார்பிலும் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் நேற்று முன்நாள் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வரும் ஐ.ஐ.டி முதன்மை தேர்வுகளைப் பொறுத்தவரை தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மாணவர்களில் 50 விழுக்காட்டினர் மட்டும் தான் அந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர். இதேபோல், நீட் தேர்விலும் பாதிக்கும் குறைவானோர் மட்டும்தான் பங்கேற்பார்கள்.

பாதிப் பேர் மட்டுமே எழுதும் தேர்வுகள் முழுமையானவையாக இருக்க முடியாது. எனவே நடப்பாண்டில் நீட் மற்றும் ஐஐடி நுழைவுத்தேர்வுகளை அரசு ரத்து செய்ய வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை தீர்மானித்து, அதற்கான அவசர சட்டத்தை கடந்த ஜூன் 15-ஆம் தேதி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கூறி, அவசரச் சட்டத்தை ஜூலை மாதத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

ஆளுநரின் விருப்பப்படி தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி அரசு செலவில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை நீட்டித்து தயாரிக்கப்பட்ட புதிய அவசரச் சட்டத்திற்கு கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்த தமிழக அமைச்சரவை, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவது நியாயமற்றது. இனியும் தாமதிக்காமல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழக ஆளுநர் முன்வர வேண்டும்.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் 27% இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை தேவை

அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், இந்திய மருத்துவக் குழுவின் செயலாளர், இந்திய பல் மருத்துவக் குழுவின் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்குள் இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி, அக்குழுவில் இடம்பெறும் தமிழக அரசின் பிரதிநிதி பெயரும் அறிவிக்கப்பட்டுவிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒன்றரை மாதங்கள் ஆகும் நிலையில், இன்று வரை குழு அமைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டவாறு, மத்திய அரசு உடனடியாக குழுவை அமைத்து இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.

நெல்கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000ஆக உயர்த்த வேண்டும்

தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில், அதாவது ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பயனாக, காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவாக சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைச்சல் நன்றாக இருப்பதால், காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், நெல் எவ்வளவு விலைக்கு கொள்முதல் செய்யப்படும் என்பதைப் பொறுத்தே, விவசாயிகளின் மகிழ்ச்சி நீடிக்குமா? என்பது தெரியும்.

நடப்பாண்டில் நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு ஒரு குவிண்டாலுக்கு 53 ரூபாய் மட்டுமே உயர்த்தி உள்ளது. அதன்படி, சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் 1868 ரூபாய்க்கும், சன்னரக நெல் ஒரு குவிண்டால் ரூ.1888-க்கும் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். தமிழக அரசின் சார்பில் வழக்கம் போல ஒரு குவிண்டாலுக்கு ரூ.70 ஊக்கத்தொகை வழங்கப்பட்டாலும்கூட, கொள்முதல் விலை ரூ.2000-ஐத் தாண்டாது. ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்தி செலவு ரூ.1,871ஆக உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் விலை லாபகரமானதாக இருக்காது. இதை மனதில் கொண்டு பிற செலவுகளையும் சேர்த்து ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையாக ரூ.3,000 அறிவிக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஏற்பட்டுள்ள சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.11 வரை குறைத்துள்ளன. இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.32 முதல் ரூ.41 வரை கொள்முதல் விலையாக வழங்குகிறது. ஆனால், ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு பாலை விற்கும் தனியார் நிறுவனங்கள், ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.18 முதல் ரூ.25 வரை மட்டுமே விலையாகத் தருகின்றன. இது நியாயமற்றதாகும்.

தனியார் நிறுவனங்களின் பேராசையால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, தனியார் நிறுவனங்களுக்கான பால் கொள்முதல் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்; அந்த விலை ஆவின் கொள்முதல் விலைக்கு இணையாக இருக்க வேண்டும்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் நான்காம் தர குடிமக்களாக அடிமைப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

இலங்கையில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை பொதுமக்கள் முன்னணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அந்த நாட்டின் அதிபராக கோத்தபயா ராஜபக்ச, பிரதமராக மகிந்தா ராஜபக்ச, அமைச்சர்களாக ராஜபக்ச சகோதரர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

அதே நேரத்தில், இலங்கையில் முதன்மை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தும், பிளவுபட்டும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசியலில் என்னெற்றும் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் மாற்றியமைக்க ராஜபக்ச சகோதரர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் முதல் கட்டமாக, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தை புதிதாக உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில அரசுகள் ஒழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அத்தகைய நிலை ஏற்பட்டால், தற்போது மூன்றாம்தர குடிமக்களாக வாழும் தமிழர்கள், இனி நான்காம் தர குடிமக்களாக வாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே, இந்த விசயத்தில் மத்திய அரசு தலையிட்டு, இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படாமல் இருப்பதையும், புதிய உரிமைகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

மத்திய அரசில் சித்த மருத்துவத்திற்கு தனித்துறை ஏற்படுத்தப்பட வேண்டும்

உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் சித்த மருத்துவ முறையை முடக்கும் நோக்குடன் அண்மையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை ஆகும். சித்த மருத்துவத்திற்கான இணை ஆலோசகர் பதவியை சில வாரங்களுக்கு முன் மத்திய ஆயுஷ் அமைச்சகம் கலைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, சித்த மருந்து இணைக் கட்டுப்பாட்டாளர் பணிக்கு சித்த மருத்துவம் படித்தவர்களை நியமிக்காமல், ஆயுர்வேத மருத்துவர் ஒருவரை ஆயுஷ் அமைச்சகம் நியமித்துள்ளது.
சித்த மருத்துவத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் சித்த மருத்துவம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சித்த மருத்துவத்திற்கு ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தனித் துறை ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துறையின் செயலாளராக சித்த மருத்துவத் துறையில் வல்லமை பெற்ற தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். சித்த மருத்துவத் துறையின் தலைமை அலுவலகம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்று பாமக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது

தென் தமிழகத்தின் சுற்றுச் சூழலைச் சீரழிக்கும் வகையிலும், புற்றுநோயைப் பரப்பும் வகையிலும் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் தென் தமிழகம் மிக மோசமான சீரழிவுகளைச் சந்திப்பதைத் தடுக்க முடியாது. எனவே, இந்த வழக்கில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களை நியமித்து, வலிமையான வாதங்களை முன்வைப்பதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தீர்ப்புபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்த சட்டப் போராட்டம் தொடரும்

சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், விவசாயிகளையும், சுற்றுச்சூழலையும் காப்பாற்றும் நோக்குடன் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு தடை விதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

சென்னை & சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறி, பல்வேறு அனுமதிகளை வாங்காமல் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயல்கிறது. 8 வழிச் சாலை குறித்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நடத்தி வரும் பாமக, கடுமையான சட்டப் போராட்டத்தை நடத்தி, சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்தும்; அதன் மூலம், அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் என பாமக உறுதி ஏற்கிறது.

வங்கிக் கடன் தவணைகள் மீதான வட்டியைத் தள்ளுபடி செய்யவேண்டும்

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமைப்பு சார்ந்த தொழில்துறை, அமைப்பு சாரா தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், அவர்களின் பொருளாதாரச் சுமையை ஓரளவு குறைக்கும் வகையில், பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து வகையான கடன் தவணைகளைச் செலுத்துவதை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து ரிசர்வ் வங்கி ஆணையிட்டது. அதே நேரத்தில், ஒத்தி வைக்கப்பட்ட கடன் தவணைகளுக்குத் தொடர்ந்து வட்டி வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கியும், பிற வணிக வங்கிகளும் அறிவித்திருக்கின்றன.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு அவர்கள் வட்டி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. இந்த விசயத்தில் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகள் மீதான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

மகளிர் சுயஉதவிக் குழு கடன் தவணைகளை நிறுத்திவைக்க வேண்டும்

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்பு மற்றும் பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு, வங்கிகளில் இருந்து பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்குமான மாத தவணைகள் 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டன. அதே நேரத்தில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடன்களுக்கு இந்தச் சலுகை நீட்டிக்கப்படவில்லை.

கரோனா வைரஸ் பரவலால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல் தான் மகளிர் சுயஉதவிக் குழுவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப் புரிந்துகொள்ளாமல் கடன் தவணையை செலுத்தும்படி, அவர்களை மிரட்டுவது நியாயமற்றதாகும். எந்த வகையில் மிரட்டினாலும் கடன் தவணையைச் செலுத்த முடியாத நிலையில் தான் மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்கள் உள்ளனர்.

எனவே, கரோனா அச்சம் தணிந்து, நிலைமை சீரடையும் வரை மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடன்களுக்கான தவணைத் தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்வதை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கைவிட வேண்டும் என ஆணையிடும்படி ரிசர்வ் வங்கியை இக்கூட்டம் கோருகிறது.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டும்

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, மதுவிற்பனை நேரமும் முழுமையான அளவுக்கு அதிகரிக்கப் பட்டுள்ளது. சென்னையில் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகளும் மீண்டும் திறக்கப் பட்டுள்ளன.

மதுக்கடைகள் மூடப்பட்டால் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும். எனவே, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கவேண்டும்; விரைவில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்தியாவில் இந்தி அல்லாத பிற மொழி பேசும் மக்கள் மீதான மொழி சார்ந்த அத்துமீறல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. அண்மையில் இணையவழியில் நடைபெற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான பயிற்சி முகாமை முழுக்க முழுக்க இந்தியில் நடத்திய மத்திய ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள், இந்தி தெரியாத பிற மொழி பேசும் மருத்துவர்கள் வெளியேறலாம் என்று ஆணவத்துடன் கூறினர். இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால், எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.

மொழி சார்ந்த வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றமும், 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் அலுவல் மொழிகளாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்யவேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி பரிந்துரைத்திருந்தது. அனைத்து மொழிகளையும் அலுவல் மொழிகளாக அறிவிப்பது மட்டுமே இந்தியாவை உண்மையான கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாடாக மாற்றும் என்பதால், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்தியாவில் அலுவல் மொழிகளாக அறிவிக்கவேண்டும் என்று மத்திய அரசை பாமக கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு பாமக பொதுக்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x