Published : 06 Sep 2020 01:13 PM
Last Updated : 06 Sep 2020 01:13 PM

‘தமிழ்நாட்டு அரசுப் பணிகள் தமிழர்களுக்கே’-நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் புதிய சட்டமியற்ற பாமக வலியுறுத்தல் 

சென்னை

தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பவும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலைப் பணிகள் அனைத்தையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாமகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தமிழ்நாட்டு அரசுப் பணிகள் தமிழர்களுக்கே” - புதிய சட்டம் இயற்ற வேண்டும்

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும், வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் படித்த இளைஞர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதன் மூலம்தான் இந்நிலையை மாற்றி, இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர்வது அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளில்தான் பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வந்தார்கள். அதனால், தமிழ்நாட்டில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

பிற மாநிலத்தவரைப் பணியில் அமர்த்துவதற்காகவே பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் திட்டமிட்டுக் குளறுபடிகள் நிகழ்த்தப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அஞ்சல்துறை பணிக்கான போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழிக்கான தேர்வுகளில் தமிழே தெரியாத ஹரியாணா மாணவர்கள் முதல் இடங்களைக் கைப்பற்றியதாக அறிவித்து, அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிய கொடுமை நிகழ்ந்தது.

இத்தகைய சூழலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்றால், அது மாநில அரசுப் பணிகள் மட்டும்தான் என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், இப்போது தமிழக அரசுப் பணிகளிலேயே மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழக அரசின் பணி நியமனம் தொடர்பான சட்டங்களில் அதற்கு வாய்ப்புகள் இருப்பதால் தான், பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் ஊடுருவுகின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் இந்தச் சிக்கலுக்கு மத்தியப் பிரதேச அரசு வழிகாட்டியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் அனைத்து அரசுப் பணிகளும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்றும், அதற்கான சட்டத்திருத்தங்கள் செய்யப்படும் என்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருக்கிறார். உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மத்தியப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

அதேபோல், தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பணிகளும் முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை வரும் 14-ம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பவும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலைப் பணிகள் அனைத்தையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரும்படி இப்பொதுக்குழு கோருகிறது”.

இவ்வாறு பாமக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x