Last Updated : 24 Sep, 2015 10:29 AM

 

Published : 24 Sep 2015 10:29 AM
Last Updated : 24 Sep 2015 10:29 AM

சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு

பிரபல ஆன்மிக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி, ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 85. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தயானந்த சரஸ்வதியின் இறுதிச் சடங்குகள் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இன்று நடக்கின்றன.

தமிழகத்தில் கோயம்புத்தூர் ஆனைகட்டி மற்றும் உத்தரா கண்டில் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் ஆர்ஷ வித்யா குருகுலம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி ஆன்மிகப் பணியாற்றி வந்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. இந்த ஆசிரமத்தின் கிளை அமெரிக்காவிலும் உள்ளது. இந்த 3 ஆசிரமங்களிலும் மாறி மாறி தங்கி வேதாந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தார். தயானந்த சரஸ்வதிக்கு தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் லட்சக்கணக்கான சீடர்கள் உள்ளனர்.

கடந்த 3 மாதங்களாக அவர் உடல்நலம் குன்றி இருந்தார். அமெரிக்கா சென்றிருந்த அவர், அங்கிருந்து சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். சிறிது இடைவெளிக்குப் பிறகு, அவரது உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டதால் கடந்த 13-ம் தேதி டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடைசிக் காலத்தை கங்கைக் கரையில் உள்ள தனது ரிஷிகேஷ் ஆசிரமத்தில் கழிக்க விரும்புவதாக அவர் கூறியதையடுத்து, நேற்று முன்தினம் காலை அவர் ஆசிரமத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரது சீடர்கள் உடனிருந்து அவரை கவனித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.55 மணிக்கு அவர் காலமானார். இதை அவரது சீடர்களில் ஒருவரான டாக்டர்.ஆர்.கே.பரத்வாஜ் உறுதி செய்தார். இத்தகவலை ரிஷிகேஷ் ஆசிரம பொறுப்பாளர் சுதானந்த சுவாமிகள், டிரஸ்டி சாந்தமானத் சுவாமிகள் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதுகுறித்து ரிஷிகேஷின் கோவிலூர் மடத்தின் பொறுப்பாளர் விசாலாட்சி மெய்யப்பன் கூறும்போது, ‘‘வேதாந்த பாடங்கள் எடுப்பதில் தயானந்த சரஸ்வதி சுவாமிகளுக்கு அளவு கடந்த ஆர்வம் உண்டு. பகவத் கீதை மற்றும் உபநிஷத்களை மனம் உருக அவர் பிரசங்கம் செய்வதைக் கேட்க, மக்கள் கூட்டம் அலைமோதும். ஏழை, பணக்காரர் என வித்தியாசம் பார்க்காமல் உதவும் இளகிய மனம் கொண்டவர்’’ என்றார்.

பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள முக்கியப் பிரபலங்கள் பலர், இவரை தம் ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, நரேந்திர மோடி கடந்த 11-ம் தேதி சுவாமி தயானந்த சரஸ்வதியை ரிஷிகேஷ் ஆசிரமத்தில் வந்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்.

ஒவ்வொரு ஆண்டும் ரிஷிகேஷ் வரும் ரஜினிகாந்த் இங்குள்ள ஆசிரமத்தில் தங்கி சுவாமி களின் உபன்யாசத்தை கேட்பது வழக்கம்.

தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு குறித்து ட்விட்டரில் எழுதியுள்ளார். ‘‘சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு மாபெரும் இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவர் ஞானம், ஆன்மிகம், மக்கள் பணியில் சிறந்து விளங்கியவர்’’ என்று கூறியுள்ளார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் உடல் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் கண்ணாடி பேழைக்குள் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு உத்தராகண்ட் ஆளுநர் கிருஷ்ணகாந்த், முதல்வர் ஹரீஷ் ராவத் மற்றும் மாநில அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சுவாமி தயானந்த சரஸ்வதியின் உடல் இன்று காலை 10.30 மணிக்கு அவரது ஆசிரமத்திலேயே அடக்கம் செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x