

திருவாரூர் மாவட்டம் கொருக்கை யில் செயல்படும் அரசு கால்நடைப் பண்ணை உம்பளச்சேரி இன நாட்டு மாடுகள் விற்பனையில் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தப் பண்ணையில் கால்நடைகளை விலை நிர்ணயம் செய்வதில் கடை பிடிக்கப்படும் அணுகுமுறையால் இந்த கால்நடை இனங்களே விற் பனையாகாமல் முடங்கிப்போய் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையில் செயல்படும் அரசு பண்ணையில் உம்பளச்சேரி இன மாடுகளில் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு ஒரு விவசாயிக்கு ஒரு காளை கன்றும், ஒரு பசுங்கன்றும் வழங்கப்படுகிறது.
ஆண்டுக்கு சுமார் 150 கன்றுக் குட்டிகள்வரை இந்தப் பண்ணையிலிருந்து விற்கப்பட்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக 5 அல்லது 6 என்ற அளவிலேயே கன்றுகள் விற்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் இந்தப் பண்ணையில் கன்றுகளை எடை வைத்து விற்க வேண்டுமென்ற தவறான அணுகுமுறை என்று கூறப்படுகிறது. ஒரு கிலோ ரூ.250 என விலை வைத்து காளைக் கன்றுகளை விற்கின்றனர். இதனால் ஒரு வயதுடைய காளைக் கன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரை விலை கொடுக்க வேண்டியுள்ளது. இதேபோல, ஒரு வயதுடைய பசுங் கன்றுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் வெளிச் சந்தையில் இந்த வகை கன்று கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்துக்குள்ளாகவே விற்கப் படுகிறது. இதனால் இப் பண்ணையில் பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் கூடுதல் விலைகொடுத்து வாங்க மறுத்துவருவ தால், கொருக்கை அரசுப் பண்ணையில் கன்றுக் குட்டிகள் விற்பனை முடங்கிவிட்டது.
இதுகுறித்து உம்பளச்சேரி பாரம்பரிய ஆராய்ச்சி மையத்தை நடத்தி வரும் ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகிராமன் கூறிய தாவது: இதற்கு அடிப்படைக் காரணம் வயது அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த கன்றுக் குட்டிகள் தற்போது ஒரு கிலோ ரூ.250 என கறிக்கு விற்பனை செய்வதுபோல எடை வைத்து விற்கப்படுவதுதான்.
அருகில் உள்ள கிராமங்களில் இவ்வளவு விலை விற்கப்படவில்லை. உணவுக்காக கறி வாங்கும்போது மட்டுமே எடை வைத்து வாங்கும் பழக்கம் உள்ள நிலையில், விவசாயத்துக்கு உதவும் மாடுகளை எடை வைத்து விற்பது எந்த விதத்திலும் பொருத்தமற்றதாகும்.
எடை விற்பனை முறையில் நிர்ணயிக்கப்படும்போது, கூடுதல் விலை கொடுத்து வாங்கும் சக்தி விவசாயிகளிடம் இல்லை. எனவே, இந்த கால்நடை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசுப் பண்ணையின் தவறான அணுகுமுறையால் உம்பளச்சேரி கால்நடை இனமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அரசின் உத்தரவுப்படியே...
இதுகுறித்து விசாரித்தபோது, கொருக்கை அரசு கால்நடைப் பண்ணை வட்டாரங்கள் தெரிவித்த தாவது: பொதுவாகவே அரசுப் பண்ணைகளில் விற்கப்படும் கால்நடைகளை எடை வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று அரசிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. அந்த அடிப்படையில் உம்பளச்சேரி நாட்டு மாடுகள் கொருக்கை அரசு பண்ணையில் எடை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ ரூ.250 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதனடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்தகைய நடைமுறை வந்த பின்னர் முன்பதிவு செய்த விவசாயிகள் விலை கட்டுபடி ஆகவில்லை என்று கூறி இந்த வகை கால்நடைகளை வாங்காமல் திரும்பி சென்று விடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக கால்நடைகள் விற்கப்படாமல் இருப்பதன் காரணம் குறித்து கேட்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இப்பகுதி விவசாயிகளின் கருத்துகள் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தனர்.
அரசு விசாரிக்க கோரிக்கை
வடசேரி விவசாயிகள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார், பாலாஜி, சவுந்தர் ஆகியோர் கூறியதாவது:
உம்பளச்சேரி கன்றுகளை வாங்க முன்பதிவு செய்த அடிப்படையில் நாங்கள் 6 பேர் இங்கு வந்தோம். ஆனால், வெளிச் சந்தையில் ரூ.5 ஆயிரம் அடக்க விலைக்கு விற்கப்படும் கன்றுக்கு இங்கு ரூ.12 ஆயிரத்துக்கும் கூடுதலாக விலை சொல்கின்றனர். இதனால் வாங்கவில்லை. எங்களைப் போலவே பல விவசாயிகளும் வாங்காமல் திரும்பிச் செல்கின்றனர். இப்படி விவசாயிகள் வாங்க முடியாத அளவுக்கு விலை நிர்ணயிக்கக் காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து, தமிழக அரசு விரிவாக விசாரிக்க வேண்டும் என்றனர்.