Last Updated : 06 Sep, 2020 11:09 AM

 

Published : 06 Sep 2020 11:09 AM
Last Updated : 06 Sep 2020 11:09 AM

தொடர் மழையால் நிரம்பியது பாரூர் பெரிய ஏரி: முதல் போக பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், நெடுங்கல் பகுதிகளில் பெய்த மழையால் முழுமையாக நீர் நிரம்பி கடல் போன்று காட்சியளிக்கும் பாரூர் பெரிய ஏரி.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை யால், பாரூர் பெரிய ஏரி நேற்று நிரம்பியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பாரூர் பெரிய ஏரிக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் செல்கிறது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர், நெடுங்கல் தடுப்பணை வழியாக 3 ஏரிகளைக் கடந்து பாரூர் பெரிய ஏரிக்குச் செல்கிறது. 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாரூர் ஏரியில் 249 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு பிரதான கால்வாய் மூலம் 1583.75 ஏக்கர் நிலமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813.67 ஏக்கர் நிலமும் என மொத்தம் 2397.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், பெனுகொண்டாபுரம் ஏரி வரை 7 ஏரிகளுக்கும், விருப்பம்பட்டி முதல் பாளேதோட்டம் வரை உள்ள 7 ஏரிகள் உட்பட 20 ஏரிகளுக்கும் செல்கிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் ஏரியின் மொத்த நீர்மட்டமான 15.60 அடியில் 13.30 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. இதையடுத்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாரூர், நெடுங்கல் பகுதிகளில் பெய்த மழையால் பாரூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து நேற்று 15.60 அடியை எட்டியது. பாரூர் ஏரி முழுமையாக நிரம்பியதைத் தொடர்ந்து, ஏரிக்கு வரும் உபரி நீரான விநாடிக்கு 68 கனஅடி தண்ணீர் பாசனத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘பாரூர் பெரிய ஏரியின் உபரி நீர் 20 ஏரிகளுக்கு கால்வாய் மூலம் செல்கிறது. இதில், 11 ஏரிகள் தற்போது நிரம்பி உள்ளன. 3 ஏரிகளில் 25 முதல் 75 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. நெடுங் கல் தடுப்பணையில் இருந்து நேரடியாக 5 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது பரவலாக பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாசனத்துக்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது,’’ என்றனர்.

விவசாயிகள் கூறும்போது, ‘‘தொடர் மழையால் பாரூர் பெரிய ஏரி நிரம்பி உள்ளதால், முதல்போக சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும். பாரூர் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை வறண்டு காணப்படும் ஏரிகளில் நிரப்ப வேண்டும்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x