

கோவை ரயில் நிலையத்துக்கு வரும்பயணிகளின் உடல் வெப்பநிலையை கண்டறிய தானியங்கி கருவி பொருத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை (7-ம் தேதி) முதல் மாவட்டங்களுக்கு இடையே ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. கோவை-சென்னை இடையே நான்கு விரைவு ரயில்களும், கோவை-மயிலாடுதுறை இடையே ஜன்சதாப்தி ரயிலும் இயக்கப்பட உள்ளன.
இதையடுத்து, கோவை ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ரயில் இயக்கம் தொடங்கியவுடன் ஆயிரக்கணக்காண பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்து செல்வார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையையும் தனித்தனியே ஆட்களைக் கொண்டு பரிசோதிப்பது சிரமமான காரியம் என்பதால் ரூ.2 லட்சம் செலவில் நுழைவு வாயிலில் தானியங்கி கருவியை பொருத்தியுள்ளோம். அந்த கருவி உள்ள இடத்தில் இருந்து 2 மீட்டர் தூரத்தில் யார் வந்தாலும் அவர்களின் உடல் வெப்பநிலை தன்னிச்சையாக பதிவு செய்யப்படும். அதேபோல சம்பந்தப்பட்ட பயணியின் உருவமும் பதிவாகும். இதன்மூலம், யாருக்கு எவ்வளவு உடல் வெப்பநிலைபதிவானது என்ற டிஜிட்டல் பதிவேடு இருக்கும். ஒருவேளை இயல்பைவிட யாருக்கேனும் கூடுதல் வெப்பநிலை இருந்தால் சைரன் ஒலிக்கும். இதை வைத்து அந்த நபரை ரயில்வே பணியாளர்கள் தனிமைப்படுத்த முடியும். மேலும், முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படுவதால் யார் பயணிக்கிறார்கள் என்ற விவரம் ரயில்வே வசம் இருக்கும்’’ என்றனர்.