வாகன தகுதிச்சான்று பெற ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்: நெடுஞ்சாலை விபத்துகளை குறைக்க உதவுமா புதிய விதிமுறை?

வாகனத்தின் முகப்பில் 'சில்வர்' நிறத்தில் ஒட்டப்பட்டுள்ள ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்
வாகனத்தின் முகப்பில் 'சில்வர்' நிறத்தில் ஒட்டப்பட்டுள்ள ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்
Updated on
2 min read

நெடுஞ்சாலைகளில் இரவுநேரங்களில் வாகனங்கள் செல்லும்போது, பழுது அல்லது ஓய்வுக்காக சாலையோரம் ஏதேனும் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால், அவை நிற்பது தெரியாமல் பின்னால் வரும்வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது.

இதைத் தவிர்க்க வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் பட்டு, ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என்ற மோட்டார் வாகன விதிமுறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், சில வாகனங்களில் தரமான ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால் அவை நாளடைவில் மங்கி ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை இழந்துவிடுகின்றன. இதுவும், விபத்து ஏற்பட காரணமாகிறது.

எனவே, விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில்வாகனங்களில் ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கரை ஒட்டுவது குறித்து புதிய விதிமுறையை போக்குவரத்து ஆணையரகம் பிறப்பித்துள்ளது. அதன்படி, பேருந்து, கார், லாரி, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கும் அரசு அங்கீகரித்துள்ள ‘3எம் இந்தியா’, ‘ஏவ்ரி டென்னிசன்(இந்தியா)’ ஆகிய நிறுவனங்களிடமிருந்து மட்டுமே ஸ்டிக்கரை வாங்கி ஒட்ட வேண்டும். அவ்வாறு ஒட்டினால்தான் வாகன தகுதிச் சான்று (எஃப்.சி) வழங்கப்படுகிறது.

சான்று இருந்தால் மட்டுமே எஃப்.சி.

இதுதொடர்பாக கோவை (மைய) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் கூறும்போது, “நெடுஞ்சாலையில் வாகனம்நின்றாலும், பின்னால் வரும் ஓட்டுநரின்கண்ணுக்கு அந்த வாகனம் முன்னே மெதுவாக செல்வதுபோலத்தான் தென்படும். இதுபோன்ற சூழலில் வாகனங்களின் இருப்பை உறுதி செய்து எச்சரிக்க, ‘ரிப்ளக்டர் ஸ்டிக்கர்கள்’ பயன்படுகின்றன.

புதிய விதிமுறைப்படி வாகனங்களின் முன்பகுதியில் சில்வர் நிறத்திலும், பின்பகுதியில் சிவப்பு நிறத்திலும், பக்கவாட்டு பகுதிகளில் மஞ்சள்நிறத்திலும் ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும். இதில், போலிகளை தவிர்க்க, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் ஸ்டிக்கர் வாங்கி ஒட்டும்போதே, புகைப்படம் எடுத்து பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்து உரிமையாளருக்கு சான்று வழங்குகின்றனர். அந்தச் சான்றில், ஹாலோகிராம், கியூ.ஆர்.கோட் ஆகியவை இருக்கும். அதை சரிபார்த்தே தகுதிச் சான்று (எஃப்.சி.) வழங்குகிறோம். வேறு ஸ்டிக்கர் இருந்தால் சான்று வழங்கப்படாது” என்றார்.

விலையை முறைப்படுத்த வேண்டும்

அரசு அங்கீகரித்துள்ள நிறுவனங்களிடம் இருந்து ஸ்டிக்கர் வாங்கினால்மாவட்டத்துக்கு மாவட்டம் அதன் விலை வேறுபடுவதாக கூறுகின்றனர், வாடகை வாகன உரிமையாளர்கள். கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க(சிஐடியு) பொதுச் செயலாளர் பி.கே.சுகுமாறன் கூறும்போது, “ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து மட்டும்தான் அதை வாங்க வேண்டும் என்று அரசுநிர்பந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும் ஸ்டிக்கரின் விலையை முறைப்படுத்தி ஒரே கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.

கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் என்.முருகேசன் கூறும்போது, “முன்பு லாரிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டினால் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலவாகும். தற்போது லாரிக்கு ரூ.4,500 வரையும், டாரஸ் லாரிகளுக்கு ரூ.7 ஆயிரம் வரையும் செலவாகிறது. கரோனா ஊரடங்கால் ஏற்கெனவே வாடகை வாகன உரிமையாளர்கள் வருவாய் இழந்து இக்கட்டான சூழலில் உள்ளனர். இந்தச் சூழலில் ஸ்டிக்கர் விதிமுறையை அமல்படுத்துவது குறித்து உரிமையாளர்களின் கருத்தையும் அரசு கேட்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in