

கோவையில் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனை, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் எம்.இப்ராஹிம் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் விதமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தான் செல்லும் யாத்திரைக்கு அவர் ஆதரவு கோரினார்.
அதன் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜகவில் இணைந்திருப்பது இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. அவருக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டதில், கட்சி அமைப்பு விதிமுறைகள் மீறப்படவில்லை. இதற்கு முன்பாக சுரேஷ்பிரபு, ஜெய்சங்கர் போன்றவர்கள் கட்சியில் சேர்ந்தவுடன் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அண்ணாமலை வரவு பாஜகவுக்கு கூடுதல் பலமாகும்.
எல்லா துணைத் தலைவர்களுக்கும் தனித் தனியாக வேலை இருக்கும். புதியதாக யாராவது வந்தால் அதிகாரம் போய் விட்டது என யாரும் நினைக்க வேண்டியதில்லை. கட்சிக்காரர்கள் யாரும் இதுகுறித்து பேசவில்லை, வெளியில் இருப்பவர்கள்தான் கவலைப்படுகின்றனர். அதிகாரத்துக்கு வர நினைத்து ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கினால் அதை நாங்கள் வரவேற்கின்றோம். விரைவில் அரசியல் களத்துக்கு வீரராக ரஜினிகாந்த் வர வேண்டும். வந்த பின்னர், யார் கேப்டன் என்பதை காலம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.