Published : 06 Sep 2020 10:20 AM
Last Updated : 06 Sep 2020 10:20 AM

நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர்கள் கைது: துப்பாக்கி, மான் கொம்புகள் பறிமுதல்

கோவையில் வனத்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் நாட்டு வெடிகுண்டுகள், மான் கொம்புகள், துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்கவும், அவற்றின் இறைச்சிக்காகவும் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டுவெடிகுண்டை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். வெடிமருந்தை சிறு கற்கள் மற்றும் இரும்பு துகள்களுடன் சேர்த்து இறுகக் கட்டி வனப் பகுதிகளில் வைக்கின்றனர். அவற்றை பன்றிகள் கடிக்கும்போது வெடித்து வாய் சிதறி உயிரிழக்கின்றன. இதனால் யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும் சில நேரங்களில் பாதிக்கப்படுகின்றன. அண்மையில் மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் செங்கல்படுகை என்ற இடத்தில் அவுட்டுக்காயை கடித்த பசுமாடு, வாய் சிதறி உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி, சுருக்கு கம்பி, வலை.

அவுட்டுக்காய் தயாரிப்பு தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி உதவி வனப் பாதுகாவலர்கள் செந்தில்குமார், தினேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர், காவல்துறையினருடன் இணைந்து நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் கூறும்போது,

“பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உட்பட்ட 5 கிராமங்கள், போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உட்பட்ட ஒரு கிராமம், மதுக்கரை வனச் சரகத்துக்கு உட்பட்ட 2 கிராமங்களில் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது. அதில், கரடிமடை கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி (30)யின் வீட்டிலிருந்து ஒரு நாட்டு வெடிகுண்டு, ஏர் கன், வலை, கத்தி, கன்னி பொறி ஆகியவை கைப்பற்றப்பட்டன. அதேபோல, மதுக்கரை மூங்கில் மடாய் குட்டையை சேர்ந்த செல்வம் (75) என்பவரிடமிருந்து 4 மான் கொம்புகள், கன்னி பொறி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விராலியூர் அடுத்த வெள்ளெருக்கம்பாளையத்தைச் சேர்ந்த சின்னசாமியின் வீட்டிலிருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள், ஈட்டிகள் ஆகியவையும், அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமியிடமிருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள், மான் கொம்புகள், வலை ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. இதில், ரங்கசாமி, துரைசாமி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையின்போது, வனத்தை ஒட்டிய கிராம மக்களுக்கு அவுட்டுக்காய் தயாரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x