

ரேஷன் கடையின் விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியில் சில அதிகாரிகள் ஏற்படுத்திய மன உளைச்சலே காரணம் என கூட்டுறவு ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு மூப்பர் காலனி பகுதியை சேர்ந்தவர் மதி (47). இவர் ஆம்பூர் வடச்சேரி பகுதியில் உள்ள முழு நேர கூட்டுறவு ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் கடையை திறந்த மதி, சிறிது நேரத்தில் கடையின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரேஷன் பொருட்களை வாங்க காலை 9 மணிக்கு வந்த அப்பகுதி மக்கள், மதி தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடனே, இது குறித்து உமராபாத் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை மீட்டனர்.
பின்னர், வழக்குபதிவு செய்த போலீஸார் மதி தற்கொலை குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவரது சட்டைப் பையில் ஒரு துண்டுச்சீட்டு கிடந்தது. அதில், தன் தற்கொலைக்கு நானே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் மதி தற்கொலையின் பின்னணியில் கூட்டுறவு அதிகாரிகள் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தியது காரணமாக இருக்கலாம் என ரேஷன் கடை விற்பனையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து கூட்டுறவு ரேஷன் கடை விற்பனையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘‘பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களுடன், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு மற்றும் எண்ணெய் பொருட்களின் அளவு 45 சதவீதமாக அரசு குறைத்து விட்டது. ஆயிரம் கார்டுகள் உள்ள கடைகளுக்கு 400 கார்டுகளுக்ககான பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
இது தவிர கட்டுப்பாடற்ற பொருட்களான டீத்தூள், சோப்பு, சேமியா, அரசு உப்பு, சீரகம், மிளகு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பொருட்களை பொதுமக்களிடம் கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்ற அதிகாரிகளின் கெடுபிடி கடந்த 4 மாதங்களாக அதிகரித்து வருகிறது.
ஆயிரம் ரேஷன் கார்டு உள்ள கடைக்கு கட்டுபாட்டற்ற பொருட்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் இப்பொருட்களுக்கான வரவேற்பு இல்லாததால், அதிகாரிகளிடம் பதில் சொல்ல முடியாத துயரத்துக்கு விற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாதம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே ஊழியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆனால், இது போன்ற பல காரணங்களால் விற்பனையாளர்களுக்கு மாதம் 4 முதல் 5 ஆயிரம் வழை இழப்பு ஏற்படுகிறது. மதி தற்கொலை செய்து கொண்டது குறித்து விரிவாக விசாரணை நடத்தி போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
டீத்தூள், சோப்பு, சேமியா, அரசு உப்பு, சீரகம், மிளகு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பொருட்களை பொதுமக்களிடம் விற்பனை செய்ய அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.