

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என உண்மைக்கு மாறான தகவலை சொல்லி, மக்களை ஏமாற்ற முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மின்சார உற்பத்தி பற்றியும், மின்வெட்டு பற்றியும் அதிமுக ஆட்சியாளர்கள் உண்மைக்கு மாறான செய்திகளை அடுக் கடுக்காகச் சொல்லி, கடந்த நான்கரை ஆண்டுகாலமாக தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் தொடர்ந்து மின் வெட்டு இருப்பதாக பத்திரிகை களில் செய்திகள் வெளியா கின்றன. மின்வெட்டை கண்டித்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், துறையின் அமைச்சர் தமிழகத்திலே மின் வெட்டே இல்லை என்று ஏமாற்றுகிறார்.
அதை நம்பி சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர், ‘மின்வெட்டு முழுவதுமாக களையப்பட்டு இன்று மிகை மின் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது’ என்றார். முதல்வர் அறிவித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே, அது எவ்வளவு பெரிய பொய் என்பதை மாநாட்டுக்கு வந் திருந்த முதலீட்டாளர்கள் புரிந்து கொண்டால், எந்த அளவுக்கு தமிழக அரசுக்கு தலைகுனிவு என்பதை ஆட்சியாளர்கள்தான் கூறவேண்டும்.
கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் படித்த அறிக்கையில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம், சுமார் ரூ.3,960 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
இந்த அனல் மின் திட்டம், 2015-ம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும் என்று அறிவித்தார். 2015-ம் ஆண்டு இறுதி வந்து விட்டது. என்ன ஆயிற்று இந்தத் திட்டம்?
நாட்டில் நடப்பதையெல்லாம் மறைத்துவிட்டு மின்வெட்டே இல்லை என்று அமைச்சர் பேரவையில் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்கிறார். இதனால் மின்வெட்டால் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் குறைந்துவிடுமா? சிலரை பல நாள் ஏமாற்றலாம், பலரை சிலநாள் ஏமாற்றலாம்.
ஆனால், எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. அதுபோல அதிமுக ஆட்சியின் அவலங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு வரும் தமிழக மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.