Published : 05 Sep 2020 09:50 PM
Last Updated : 05 Sep 2020 09:50 PM

உணவகங்கள் ஏசி வசதியுடன் இயங்கலாம்: அரசு உத்தரவு

செப்டம்பரில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் தளர்வாக உணவகங்கள் ஏசி வசதியுடன் செயல்படலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடுமையாக பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் மே மாதத்தில் தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை பல்கி பெருகியது. சென்னை முக்கியமான தொற்று மண்டலமாக மாறியது.

சென்னை கோயம்பேடு சந்தையில் பரவிய தொற்று பின்னர் மாவட்டங்களில் வேகமாக பரவியது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்தது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் கரோனா தொற்று அதிகரித்தை அடுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் அதிகரித்தனர். ஆனாலும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் 6000க்கு குறையாமல் உள்ளது.

ஊரடங்கு கடுமையாக இருந்த நேரத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் ஒன்று உணவகங்களுக்கான கட்டுப்பாடு. இதன் பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது உணவகங்கள் திறக்கவும் அதில் 50 சதவீதம் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி, ஏசி வசதி பயன்படுத்தக்கூடாது, 6 மணியுடன் மூடவேண்டும், அதற்கு மேல் பார்சல் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதேப்போன்று ஏசி வசதி காரணமாக கரோனா தொற்று பரவும் என்பதால் தியேட்டர்கள், மால்கள், நகைக்கடைகள், துணிக்கடைகள், நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும் ஏசி வசதிக்கு அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இன்று அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவகங்கள் இனி ஏசி வசதியுடன் இயங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு விதிகளின் படி ஏசி வசதியை பயன்படுத்தவேண்டும், காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை ஏசி வசதியுடன் உணவகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை பார்சல்களை வாங்கிக்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகள் காலை 6-00 மணிமுதல் இரவு 8-00 மணி வரை இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேப்போன்று தமிழகம் முழுவதும் இரவு 8 மணி வரை தனியார் மதுபான பார்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதி உணவகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதால் படிப்படியாக ஷாப்பிங் மால்கள், வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x