

தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரோனா தொற்று அதிகரிக்கலாம் என்கிற நிலையில் தமிழகம் முழுவதும் செய்ய்வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள், டீன்களுடன் செப்.8 அன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடுமையாக பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் மே மாதத்தில் தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை பல்கி பெருகியது. சென்னை முக்கியமான தொற்று மண்டலமாக மாறியது.
சென்னை கோயம்பேடு சந்தையில் பரவிய தொற்று பின்னர் மாவட்டங்களில் வேகமாக பரவியது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்தது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் கரோனா தொற்று அதிகரித்தை அடுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் அதிகரித்தனர். ஆனாலும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் 6000க்கு குறையாமல் உள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் செப்டம்பர் மாதத்தில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 5 மாத ஊரடங்கால் கடுமையாக வேலையிழப்பு, பொருளாதார இழப்பால் வாடும் மக்களை இனியும் ஊரடங்கை காரணம் காட்டி வீட்டுக்குள் முடக்க முடியாது என்கிற நிலையில் பல்வேறு தளர்வுகள், பொதுப்போக்குவரத்து என பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
தளர்வுகள் இருந்தாலும் கரோனா தாக்கம் குறையவில்லை, தடுப்பு மருந்து இல்லை எனும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி என அரசாங்க சொல்லும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பொதுமக்கள் தடையின்றி வெளியில் நடமாடுவதால் கரோனா தாக்கம் அக்டோபர் மாதத்தில் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்த உரிய முன்னேற்பாடுகளுடன் இருக்கவும் என தலைமைச் செயலரும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் கரோனா தாக்கம், தடுப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்த தயார் நிலையில் இருக்க என்ன செய்வது என்பது குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்டம் முழுவதும் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனை டீன்கள், மருத்துவர்களுடன் வரும் செப்.8-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
இதில் பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு நடவடிக்கைகள் அதையொட்டி எடுக்கப்படுமென தெரிகிறது.