Published : 25 Sep 2015 08:59 AM
Last Updated : 25 Sep 2015 08:59 AM

விஷ்ணுபிரியா பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை

கடலூர் அருகே கோண்டூரில் வசிக்கும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா பெற்றோர்களிடம் சிபிசிஐடி போலீ ஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா, கடந்த 18-ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அவருக்கு உயரதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால் தற் கொலை செய்து கொண்டதாக குற் றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அவரது மரணம் மற்றும் கோகுல் ராஜ் கொலை ஆகிய இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, கடந்த 5 நாட்களாக நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் சிபிசிஐடி போலீஸார் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலை மையில் டிஎஸ்பி ராஜன், இன்ஸ் பெக்டர் தீபா மற்றும் 2 போலீ ஸார் நேற்று காலை கடலூர் வந்தனர். கோண்டூரில் உள்ள விஷ்ணுபிரியா வீட்டுக்கு சென்று அவரது தந்தை ரவியிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, விஷ்ணுபிரியா கடந்த 17-ம் தேதி வீட்டுக்கு வந்தபோது கோகுல்ராஜ் வழக்கு தொடர்பாக எதுவும் கூறினாரா? என்றும் வேறு ஏதாவது தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டாரா? என்றும் கேட்டனர். விஷ்ணுபிரியா குறித்து அவரது தாயார் செல்வி, தங்கை சாரதா ஆகியோரிடமும் தனித்தனியாக விசாரித்தார்கள். அதன்பிறகு, விஷ்ணுபிரியா உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, தனக்கு கிடைத்த தகவல் மற்றும் ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி கொடுத்தாக கூறப்படுகிறது.

டிஎஸ்பி மகேஸ்வரிக்கு சிகிச்சை

தற்கொலை செய்து கொண்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் தோழியும், கீழக்கரை டிஎஸ்பியுமான மகேஸ்வரி உடல் நல பாதிப்பு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய அவரது தோழியான மகேஸ்வரி, கோகுல்ராஜ் கொலை தொடர்பாக உயரதிகாரிகள் தொடர்ந்து கொடுத்த நெருக்கடியால் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார்.

விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண் டுள்ளனர். இதனிடையே மகேஸ் வரி திடீர் விடுப்பில் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் உடல்நல பாதிப்பு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து, தமிழக அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்தார்.

குன்னூரில் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் மாநாட்டில் பங்கேற்ற லலிதா குமாரமங்கலம் நிருபர் களிடம் கூறியதாவது: பெண் டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கில், தேசிய மகளிர் ஆணை யம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதிலளிக்க 6 மாத காலஅவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. கேரள மாநிலம் மூணாறில் பெண் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இவர்களின் நிலை குறித்து புள்ளி விவரங்கள் இல்லாததால், மகளிர் ஆணையம் ஒரு குழுவை ஏற்படுத்தியது. இக்குழு வழங்கும் பரிந்துரைகளை செயல்படுத்த வர்த்தகத்துறை மற்றும் தொழிலாளர் துறைகளிடம் அறிவுறுத்தப்படும். தகவல்களை ஒருங்கிணைக்க மேலும் 6 மாதம் முதல் ஓராண்டு வரை தேவைப்படும்.

மூணாறில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களை, தேசிய மகளிர் ஆணைய நிர் வாகிகள் அடுத்த மாதம் சந்திக்க உள்ளனர். பெண் களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து நாள்தோறும் 200 புகார்கள், மகளிர் ஆணையத்துக்கு வருகின்றன. இதில் வடமாநிலங்களைவிட தென் மாநிலங்களில் புகார்கள் குறைவு என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x