Last Updated : 05 Sep, 2020 07:21 PM

 

Published : 05 Sep 2020 07:21 PM
Last Updated : 05 Sep 2020 07:21 PM

வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் குழாய் இணைப்புத் திட்டம்: திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு  

மதுரை    

திருமங்கலம் தொகுதியில் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நல்லமரம் கிராமத்தில் ரூ.48.3 லட்சம் மதிப்பீட்டில் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்புத் திட்டத்தை ( ஜல் ஜீவன் மிஷன் ) வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார். ஆட்சியர் வினய் உடனிருந்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

இத்திட்டம் பிரதமரால் 2019 ஆகஸ்ட் 15-ல் தொடங்கி வைக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் குடிநீருக்காக பெண்கள் செலவிடும் தங்களின் பெரும்பகுதி நேரத்தினைத் தடுக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் வழியே குறைந்த பட்சம் 55 லிட்டர் குடிநீர் வழங்குவதை இத்திட்டம் உறுதிப்படுத்தும். மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீத நிதி பங்களிப்பில் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கான குடிநீர் ஆதாரங்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் , ஊரக பகுதிகளில் குழாய் அமைத்து குடிநீர் வழங்குவதை ஊரக வளர்ச்சித்துறையும் செயல்படுத்துகிறது.

மதுரை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 420 ஊராட்சிகளின் 1946 கிராமங்களிலுள்ள 4.97,684 வீடுகளுக்கும் 2024 ஆம் ஆண்டிற்குள் குடிநீர் வழங்குவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. .

முதல் கட்டமாக 2020-2021ல் 1,55,231 வீடுகளுக்கு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 97,959 இணைப்புகள் 12 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 202 ஊராட்சி களின் 471 கிராமங்களுக்கு வழங்க ரூ. 82.26 கோடி நிதியில் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டில் 400 ஆண்டுகள் சாதனை படைக்கும் வண்ணம் திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் உயர்ந்து, தனிநபர் வருமானமும் உயர்ந்து உள்ளது. இந்திய கடலோர மாநிலங்களில் ஏற்றுமதியிலும் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அனைத்து துறைகளும் சாதனை படைக்கும் வகையில் முதல்வர், துணை முதல்வர் செயல்படுகின்றனர். ஆனால் முக. ஸ்டாலின், எங்களை திட்டங்களை திசைதிருப்பும் வகையில் பொய் பிரச்சாரம் செய்கிறார்.

பதவி வெறியால் அவர் எத்தனை பொய்ப் பிரச்சாரம் செய்தாலும், ஒரு போதும் மக்கள் நம்பமாட்டார்கள். இதுவரை 17,699 கோப்புகளுக்கு முதல்வர் கையெழுத்திட்டு கடைக்கோடி மக்களுக்கும் திட்டங்களை வழங்கியுள்ளார்.

வேலைவாய்ப்பு இல்லை என்ற, மு.க.ஸ்டாலின் எதிர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x