

தமிழக ஆயுஷ் மருத்துவத்துறையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் ‘கரோனா’ வார்டு பணிக்கு அனைத்து மருத்துவர்களையும் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதாக தமிழ் இந்துவில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் தற்போது அலோபதி பட்டமேற்படிப்பு மாணவர்களை போல் அரசு மற்றும் தனியார் ஆயுஷ் கல்லூரிகளில் படிக்கும் பட்டமேற்படிப்பு மாணவர்களை ஒரு பேட்ஜ்க்கு 6 பேர் வீதம் ‘கரோனா’ வார்டு பணிக்கு அனுப்படுகின்றனர்.
இந்திய மருத்துவம்(சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா) மற்றும் ஹோமியோபதி துறை, மத்திய சுகாதாரத்துறையில் ஒரு அங்கமாக செயல்படுகிறது.
மத்திய அரசில், இதனை ஆயுஷ் (சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் ஹோமியோபதி) என்று சொல்வார்கள். தமிழக அரசில் சித்தா மருத்துவத்துறை என்றும், அதன் மாவட்ட அதிகாரிகள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் என்றே அழைக்கப்படுகிறார்கள்.
தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா வார்டுகளில் ஆயுஷ் மருத்துவர்களை பணிநியமனம் செய்வதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை, மதுரையில் ‘கரோனா’ வார்டில் தற்போது ஆலோபதி மருத்துவர்களை போல் ஆயுஷ் மருத்துவர்களும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால், ஆயுஷ் மருத்துவத்துறையில் ஏற்கணவே போதுமான மருத்துவர்கள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தற்போது ‘கரோனா’ வார்டு பணிக்கு அவர்கள் செல்ல வேண்டிய இருப்பதால் அவர்கள் போதுமான காலம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமலே சுழற்சி முறையில் மீண்டும் ‘கரோனா’ வார்டு பணிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தமிழ் இந்துவில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, தற்போது அலோபதி பட்டமேற்படிப்பு மாணவர்களை கரோனா வார்டு பணிகளுக்கு பயன்படுத்துவது போல் ஆயுஷ் பட்டமேற்படிப்பு மாணவர்களும் தற்போது கரோனா வார்டு பணிகளுக்கு அனுப்பப்டுகின்றனர்.
இதுகுறித்து சித்தா மருத்துவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் ஹோமியோபதி கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1,000க்கும் மேற்பட்ட பட்டமேற்படிப்பு மாணவர்கள் படிக்கின்றனர். அலோபதி துறையில் ‘கரோனா’ வார்டில் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் அனைவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால், சித்த மருத்துவத்துறையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் ஹோமியோபதி கல்லூரிகளில் படிக்கும் பட்டமேற்படிப்பு மாணவர்கள், ‘கரோனா’ வார்டு பணிக்கு சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பயன்படுத்தப்படாமல் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஏற்கணவே ஆயுஷ் மருத்துவர்களாக இருப்பவர்களே.
இவர்களில் பலர் அரசு மருத்துவராக இருப்பதால் அவர்களுக்கு அரசு தற்போதும் ஊதியம் வழங்கி கொண்டிருக்கிறது. தனியார் மருத்துவராக இருந்து பட்டமேற்படிப்பு படித்தால் அவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கிறது. அதனால், அலோபதி மருத்துவத்துறையை போல் ஆயுஷ் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் பட்டமேற்படிப்பு மாணவர்களை ‘கரோனா’ வார்டுகளில் பயன்படுத்தலாம் என சித்த மருத்தவர்கள் தரப்பில் கோரிக்கை முன் வைத்தோம்.
தற்போது அதன் அடிப்படையில் மதுரை, தேனி மாவட்ட ஆயுஷ் பட்டமேற்படிப்பு மாணவர்கள், தேனி மாவட்டத்தில் உள்ள தேனி மேரி மாதா கல்லூரி, வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி, திரவியம் கல்லூரி ஆகிய இடங்களில் செயல்படும் கரோனா சித்த மருத்துவப்பிரிவு மையங்களில் சித்த மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றி கொண்டிருகு்கின்றனர்.
வாரம் ஒரு பேட்ஜ் என்ற வகையில் ஒரு பேட்ஜிக்கு 6 ஆயுஷ் பட்டமேற்படிப்பு மாணவர்கள் வீதம் கரோனா வார்டு பணிக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு ஒரு வாரம் கரோனா வார்டு பணி, அதற்கு அடுத்த ஒரு வாரம் அரசு ஏற்பாட்டிலே ஏதாவது ஹோட்டல்களில் தனிமைப்படுத்தி கொள்ள ஒய்வும் வழங்குகிறோம்.
அவர்கள் பணிக்கு வந்த செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 பேட்ஜ் ஆயுஷ் பட்டமேற்படிப்பு மாணவர்கள் பணிக்கு வந்து சென்றுள்ளனர், ’’ என்றனர்.