

நாகர்கோவிலில் 8 ஆண்டுகள் ஆனபின்பும் நிறைவடையாத பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நகர பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் கடந்த 2013ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வந்தது. நகர பகுதிகளை சுகாதாரமாக வைக்கும் நோக்கத்துடன் தொடங்கிய இப்பணி முறையான திட்டமிடல் இல்லாததால் 8 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலும் பணிகள் முடிவடையாமல் நகர சாலைகள் சிதறி கிடக்கின்றன.
ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் இதன் பாதிப்பு தெரியாமல் 5 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது பொதுமக்களின் வாகனங்களுடன் அரசு பேரூந்து போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஒரு பக்கம் செல்லும் வாகனத்திற்கு மறுபக்கத்தில் இடம் விடமுடியாத வகையில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சாலையோரம் குழாய்கள் பதிப்பதற்கு தோண்டப்பட்ட குழிகளால் பாதி சாலைகளில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது. அத்துடன் நாகர்கோவில் நகருக்குள் வாகனங்களில் பயணிப்பது என்பது சாகச பயணம் மேற்கொள்வதை போன்ற நிலை உள்ளது. மோட்டார் சைக்கிள் முதல் கனரக வாகனங்கள் வரை அவ்வப்போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளில் விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றன.
நாகர்கோவில் வடசேரியில் இருந்து கோட்டாறு, மீனாட்சிபுரம், வெட்டுர்ணிமடம், பொதுப்பணித்துறை சாலை என எங்கு பார்த்தாலும் இந்நிலை தான். ஒருபுறம் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளில் குழாய்கள் பதித்த பின்னர் மூடப்படுகிறது.
அதன் பின்னர் அதன் குறுக்கு வீதிகளில் குழாய்கள் பதிக்கும்போது ஏற்கனவே மூடப்பட்ட குழிகளில் உள்ள குழாய்களில் இணைக்கப்படுகிறது. அப்போது மீண்டும் மூடப்பட்ட பகுதி தோண்டப்படுகிறது. இதுபோல் தொடர்ந்த 8 ஆண்டுகளாக மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அத்துடன் தற்போது கூட்டு குடிநீர் திட்டத்தில் நாகர்கோவில் நகர பகுதியெங்கும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்காகவும் தோண்டப்பட்ட குழிகள் மற்றொரு புறம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அரசு பேரூந்து போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் மக்கள் சமூக இடைவெளியுடன் பயணம் செய்தபோதும் நாகர்கோவில் நகரெங்கும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
அதுவும் மழை நேரத்தில் சாலையெங்கும் வயல்வெளிபோன்று சகதியுடன் காட்சியளிக்கிறது. இதில் வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டு காயமடைகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி முதல் ஒழுகினசேரி வரை பாதாளசாக்கடை திட்ட பணிகளுக்காக நாகர்கோவில், திருநெல்வேலி வழித்தட போக்குவரத்து இறச்சகுளம் வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் நாகர்கோவில் நகருக்குள் கனரக வாகனங்கள் பகலில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடியில்லை. எனவே நாகர்கோவில் நகர பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை திட்டமிட்டு விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.