Published : 05 Sep 2020 06:20 PM
Last Updated : 05 Sep 2020 06:20 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்காகக் கடுமையாக உழைக்கும் ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்: தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திலீப் நெகிழ்ச்சி

2020-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் திலீப், மாணவர்களுக்காகக் கடுமையாக உழைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதைக் குடியரசுத் தலைவர் காணொலி மூலம் வழங்கினார். கரோனா பரவல் காரணமாக, ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் ஆட்சியர் முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப் மற்றும் சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் தனித்தனியே விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்றது குறித்து ஆசிரியர் திலீப் கூறும்போது, ''ஆசிரியர் தினமான இன்று (செப்.5) விருதைப் பெறுவதற்காக டெல்லியில் இருந்து முன்னதாகவே விருது கூரியர் செய்யப்பட்டது. இந்த நல்லாசிரியர் விருதைக் காணொலிக் காட்சி வழியே குடியரசுத் தலைவர் வழங்கினார். நாட்டின் முதல் குடிமகன் கையால் விருதை வாங்க முடியவில்லை என்று சற்றே வருத்தமாக இருந்தது.

எனினும் சொந்த மாவட்டமான விழுப்புரத்திலேயே குடும்பத்துடன் சென்று தேசிய விருதைப் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நல்லாசிரியர் விருதை அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். என் மாணவர்களே இந்த விருதுக்கான முதற்காரணம்'' என்றார்.

விருது பற்றி ஆசிரியர் சரஸ்வதி கூறும்போது, ''காலையிலேயே குடியரசுத் தலைவர் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது. தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி'' என்றார்.

ஏற்கெனவே ஆசிரியர்கள் திலீப் மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரின் தன்னிகரற்ற ஆசிரியப் பணி மற்றும் தனித்துவக் கற்பித்தல் பாணி குறித்த கட்டுரைகள் 'இந்து தமிழ்' இணையதளத்தில் 'அன்பாசிரியர்' என்ற தொடரில் விரிவாக வெளியாகி இருந்தன. அதைத் தொடர்ந்து அவர்களுக்குக் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 'இந்து தமிழ் திசை'யின் அன்பாசிரியர் விழாவில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் திலீப் குறித்து மேலும் அறிய: அன்பாசிரியர் 6 - திலீப்: அரசுப் பள்ளியில் ஓர் இணைய வித்தகர்!

ஆசிரியர் சரஸ்வதி குறித்து மேலும் தெரிந்துகொள்ள: அன்பாசிரியர் 50- சரஸ்வதி: விடலைப் பருவ மாணவிகளின் செல்ல டீச்சர்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x