

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும் என புதிய காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வீ.வருண்குமார் கடந்த 3-ம் தேதி இடம் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இவருக்கு பதிலாக சென்னை பூக்கடை துணை ஆணையர் இ.கார்த்திக் இடமாற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்புகளை ராமநாதபுரம் சரக டிஐஜி என்.எம்.மயில்வாகனனிடம் பெற்றுக் கொண்டார்.
காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும்,அதனையடுத்து மதுரை சட்டம் ஒழுங்கு மற்றும் சென்னை பூக்கடை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றியுள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும். குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும். கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.