

தென்காசி மாவட்டம் அடவிநயினார், கருப்பாநதி அணைகளில் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்தும் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கியது. இருப்பினும், ஜூன், ஜூலை மாதங்களில் போதிய மழை பெய்யவில்லை. இதனால், அணைகள், குளங்கள் நீர் வரத்தைப் பெறவில்லை.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள 5 அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
ஜூன் மாத தொடக்கத்தில் விவசாயிகள் கார் பருவ நெல் சாகுபடி பணியைத் தொடங்குவார்கள். ஆனால், அந்த காலகட்டத்தில் அணைகளில் போதிய நீர் இல்லாதால், அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் கார் சாகுபடி பணியைத் தொடங்கவில்லை. பெரும்பாலான விவசாயிகள் நெல் விதைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
போதிய நீரின்றி நெல் நாற்றுகள் கருகிவிட்டடன. கருப்பாநதி, அடவிநயினார் அணை பாசனத்தில் சுமார் 50 ஏக்கரில் மட்டுமே விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி கார் சாகுபடிக்காக கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பருவம் தப்பி தாமதமாக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால், சாகுபடி பணியை தொடங்குவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதுகுறித்து கருப்பாநதி அணைப் பாசன விவசாயி கண்ணையா, அடவிநயினார் அணைப் பாசன விவசாயி ஜாகிர் ஆகியோர் கூறும்போது, “பருவம் தவறி தாமதமாக கார் சாகுபடியை தொடங்கினால், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும். அப்போது தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், மழையில் பயிர்கள் சேதமடையும். எனவே, இப்போது நெல் சாகுபடி பணியை தொடங்கினால், பயிர்கள் மழையில் சேதமடையவே அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே, கார் சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டுவிட்டனர். இன்னும் 20 நாட்கள் கழித்து பிசான சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்க உள்ளனர்.
தற்போது அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரால், பெரும்பாலான விவசாயிகளுக்கு பயனில்லை. ஏற்கெனவே சாகுபடி செய்த சில விவசாயிகள் மட்டுமே பயனடைவார்கள்” என்றனர்.