

பெயரில் ராஜா இருப்பதால் மத்தியிலும் மாநிலத்திலும் நாங்கள் தான் ராஜா என எச்.ராஜா கூறியிருப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாளை ஒட்டி ஒட்டப்பிடாரத்தில் அவரது நினைவில்லத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பெயரில் ராஜா இருப்பதால் மத்தியிலும் மாநிலத்திலும் நாங்கள் தான் ராஜா என ஹெச்.ராஜா சொல்லியிருப்பார். திரையரங்குகளைத் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். நாளை மறுநாள் திரைத்துறை பிரதிநிதிகளுடன் முதல்வரை சந்திக்க திட்டமுள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், இந்தியளவிலேயே அதிகமான அளவிலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த மண் தூத்துக்குடி. அந்த வகையில், ஒட்டப்பிடாரத்தில் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய வஉசி இன்றளவும் நம் அனைவருக்கும் நாட்டுப்பற்றை உணர்த்துகிறார். அவரது இல்லத்தை நினைவிடமாக மாற்றி நெல்லையில் அவருக்கு மணி மண்டபம் அமைத்துக்க் கொடுத்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அவரது பிறந்தநாளில் நாம் அனைவரும் நாட்டுப்பற்று உணர்வைப் பெற வேண்டும் எனக் கூறினார்.
விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்:
ஒட்டப்பிடாரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, "2016 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதனை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். அவர் அறிவிப்புகளையெல்லாம் நிறைவேற்றிவரும் நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இது தொடர்பான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளார். நீதிமன்றம் பொறுத்தவரை அரசு அறிவிப்பை வெளியிட்டாலும் அதனை செயல்படுத்த உயர் நீதிமன்றம் உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும். ஆகையால் உயர் நீதிமன்றம் உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பித்ததும் விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமையும்" என்றார்.